ஆருத்ரா நிதி நிறுவனம்

 

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு நிதி நிறுவனம் , கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் , மக்களை ஏமாற்றி பல ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடாக பெற்ற நிறுவனம் தான் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம். ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால்,  மாதம் 30 சதவீதம் வரை வட்டியாக பணம் தரப்படும் எனக் கூறி, சென்னை செங்கல்பட், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2500 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று, மக்களுக்கு உரிய வட்டி தராமல் ஏமாற்றியதின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு  , விசாரணை நடைபெற்று வருகிறது.

 



குவிந்த புகார்கள்

 

ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் ரூ.2,438 மோசடி செய்ததாக  சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் குவிந்து உள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஸ்கர், மோகன்பாபு, பட்டாபிராம் பேச்சு முத்துராஜ் (எ) ரபீக், ஐயப்பன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து,  கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் அவர்களின்  வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

தொடர்ந்து சிக்கும் இயக்குனர்கள்

 

 

மீதமுள்ள முக்கிய குற்றவாளிகளான சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜசேகர், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஷ், விருதுநகர் முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த மைக்கேல் ராஜ், சென்னையை சேர்ந்த நாராயணி உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் லிமிடெட் நிறுவனத்தின் அரியலூர் மாவட்டம் குமிழன்குழி பகுதியை சேர்ந்த முக்கிய ஏஜென்டான செந்தில்குமார் (34) என்பவரை நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜெயசந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கோடியே 97 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் அளித்த தகவலின்படி நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ரூ.7.95 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் செந்தில்குமாரிடம் இருந்து இதுவரை 2.57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 



 

 திரைப்பட தயாரிப்பாளர் 

 

 

காஞ்சிபுரம், ஆர்கே கோவில் திருப்பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் ரூசோ , இவர் காஞ்சிபுரத்தில் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.‌ அதேபோல இவர் 'ஒயிட் ரோஸ்'  என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தில் ரூசோ , காவல் அதிகாரியாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.‌ அதேபோல் காஞ்சிபுரம் பகுதியில் சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.‌ பல முகங்களைக் கொண்ட ரூசோ , பல லட்சம் மதிப்புள்ள கார்களில் வலம் வருவதையும், அப்பகுதியில் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.  திரைப்பட தயாரிப்பாளராக இருந்த இவர், பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். 



இந்த நிலையில்தான் இவர், பல கோடி ரூபாய் முதலீடுகளை , பெற்று ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூசோவை கைது செய்த சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ரூசோ வங்கி கணக்கிலிருந்து சுமார் ஒரு கோடியை 40 லட்ச ரூபாய் முதற்கட்டமாக முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்