சென்னை புளியந்தோப்பு குருசாமி நகரில் வசித்து வருபவர் ரமணி (38). இவருடைய கணவர் கோவிந்தராஜ் 10 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று விட்டார். இவர்களுக்கு ராஜேஸ்வரி வயது 20 என்ற மகளும் விக்னேஷ் வயது 18 என்ற மகனும் இருந்தனர். ராஜேஸ்வரி திருமணம் ஆகி கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் , விக்னேஷ் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது திருநங்கையாக மாறினார். பின்னர் விந்தியஸ்ரீ என்ற பெயரில் வியாசர்பாடியில் உள்ள சில திருநங்கைகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பின்னர் புளியந்தோப்பு கிரே நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே தங்கி இருந்தார். அருகில் வசித்து வந்த தாய் ரமணியை அவ்வப்போது பார்த்து விட்டு செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் , நேற்று  புளியந்தோப்பில் உள்ள பாட்டி வீட்டில் இருந்த தாய் ரமணியை வீட்டுக்கு வருமாறு விந்தியஸ்ரீ அழைத்துள்ளார்.

 



 

நான் பாட்டியிடம் பேசி விட்டு வருகிறேன், நீ வீட்டில் இரு என ரமணி கூறியதை தொடர்ந்து விந்தியஸ்ரீ வீட்டுக்கு சென்றுள்ளார். ரமணி இரவு 9 மணியளவில் விந்தியஸ்ரீ வீட்டுக்கு சென்று பார்த்த போது விந்தியஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பேசின் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடம் சென்று விந்தியஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருநங்கை விந்தியஸ்ரீ இறந்த தகவல் அறிந்து 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அங்கு குவிந்தனர்.

 



 

பெரம்பூரில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற பார்ட் டைம் கால் டாக்சி டிரைவர் கைது

 

சென்னை பெரம்பூர் சின்னைய்யா நியூ காலனி 4வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் 39. இவர் தனியார் மொபைல் ஷோரூம் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது 8 வயது பெண்  குழந்தை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 6 மணிக்கு பெரம்பூர் வடிவேல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் டியூஷன் படித்து விட்டு  காலை 8 மணி அளவில் வீட்டிற்கு வடிவேல் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளை நிற காரில் வந்து சிறுமியிடம் முகவரி கேட்டுள்ளார்.

 



 

பின்பு சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு கோவிந்தசாமி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது குழந்தை கூச்சல் போடவே அங்கேயே சிறுமியை இறக்கி விட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிறுமியின் உறவினர் ஷகிலா என்பவர் குழந்தையை பார்த்து உடனடியாக சிறுமியை மீட்டு உள்ளார். மேலும் இது குறித்து சிறுமியின் தந்தையான மகேஷ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடம் சென்று மகேஷ் தனது  குழந்தையை மீட்டுள்ளார். மேலும் இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.



 

தகவலின் பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காரின் பதிவு எண்ணை வைத்து  வியாசர்பாடி மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் 1வது தெரு பகுதியை சேர்ந்த துரை பாபு (35) என்ற நபரை கைது செய்தனர். பிடிபட்ட நபர் திரு.வி.க நகர் 6 ஆவது மண்டலத்தில் ஒப்பந்தம் அடிப்படையில்  ஓட்டுநராக வேலை செய்து வருவதாகவும் மற்ற நேரத்தில் UBER  மூலம் வாடகைக்கு கார் ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும்  சம்பவத்தன்று குழந்தையை காரில் ஏற்றி சிறிது நேரம் சுற்றி உள்ளார். அதன் பிறகு சிறுமி கூச்சலிடவே அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். எனவே சிறுமியை கடத்தும் நோக்கில் அவர் செயல்பட்டதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.