வருமானத்துக்கு அதிகமாக 20 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உதவி காசாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சத்தியநாராயணன். இவர், கடந்த 1997 முதல் 2006ம் ஆண்டுகளுக்கு இடையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், சத்திய நாராயணன், 20 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அளவுக்கு தனது மகன்கள் ராமன், லட்சுமணன் ஆகியோர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து மூவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், சத்தியநாராயணன் வருமானத்துக்கு அதிகமாக 15 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்தது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகன் லட்சுமணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மற்றொரு மகனான ராமன் பெயரில் உள்ள சொத்துக்கள் அவரது சொந்த வருமானத்தில் வாங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறி, அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
மேலும், லட்சுமணன் பெயரில் உள்ள சொத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி ஓம்பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.