கடலூரை அடுத்த பனங்காட்டு நகர் பகுதியில் வசிக்கும் வீரவேலு ஒரு தலை காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீரவேலுவின் உயிரிழப்பால் மனமுடைந்த அவரது நண்பர் சூர்யமூர்த்தி என்பவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் ஆனால் அதிர்ஷ்டவசமாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வீரவேலு உயிரிழந்தது தொடர்பாக எந்த தகவலையும் காவல்துறையினருக்கு கொடுக்காமல் சடலத்தை பெற்றோர்கள் வீட்டிலேயே வைத்திருந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரவேலுவின் நண்பர் சூர்யமூர்த்தி என்பவர் தற்கொலைக்கு முயன்று கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர், சிகிச்சை பெற்று வரும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
தனது நண்பர் வீரவேல் ஒருதலை காதல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனை தடுத்து என் நண்பனை என்னால் காப்பாற்ற முடியாததனால் நானும் தற்கொலை செய்து என் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தேன் என்று கூறிய சூர்யமூர்த்தி. என் நண்பன் வீரவேல் தனது உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தான், அந்த பெண்ணும் என் நண்பனுடன் நெருங்கி பழகிவந்தார்கள். ஒரு கட்டத்தில் தனது காதலினை அந்த பெண்ணிடம் கூறப்போவதாக என்னிடம் கூறினான். பின் அந்த பெண்ணிடம் கூறிய பொழுது அந்த பெண்தான் காதல் செய்யும் நோக்கில் பழகவில்லை நட்போடு தான் பழகினேன் என கூறிவிட்டு சிறிது நாட்களில் பக்கத்து ஊரில் உள்ள ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த என் நண்பன் என்னிடம் கூறி கவலைப்பட்டான் நான் அவனுக்கு ஆறுதல் கூறி அவனை சமாதானப்படுத்தினேன். ஆனால் என் நண்பன் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வான் என நினைக்கவில்லை நான் தான் அவனை காப்பாற்றியிருக்க வேண்டும் ஆனால் என்னால் அதை செய்ய முடியவில்லை அதனால் தான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன் என கூறினார்,
சூர்ய மூர்த்தி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட வீரவேலுவின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அப்பொழுது அங்கே உறவினர்கள் உடலினை அடக்கம் செய்ய ஆயத்தம் ஆனபோது, காவல்துறையிடம் கூறாமல் ஏன் சடலத்தை அடக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கேட்டனர். இதனால் வீரவேலுவின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர் வீட்டிலே தான் தற்கொலை செய்து கொண்டார். அதனால் வழக்கு ஏதும் தேவையில்லை நாங்கள் அடக்கம் செய்கிறோம் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை அதை ஏற்காமல் சடலத்தை பிரேத பரிசோதனை செய்துதான் சடலத்தை ஒப்படைப்போம் என்று திட்டவட்டமாக கூறினர். அதன்பிறகு போலீசார் சடலத்தை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. காதல் தோல்வியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் நண்பர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவருடைய நண்பரும் தற்கொலைக்கு முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது