செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாய் சேய் நல பிரிவில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் படுக்கையில் இருந்த தாயும், குழந்தையும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாய் சேய் நல பிரிவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. இதில் செங்கல்பட்டு மாவட்டம் தவிர்த்து, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் எடப்பாளையம் பகுதியை சார்ந்தவர் தனசேகரன்- லோகேஸ்வரி தம்பதி இவர்களுக்கு கடந்த 19 ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்ததும், தாயும் சேயும் முதல் மாடியில் உள்ள வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை அந்த வார்டில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து குழந்தை தாய் படுத்திருந்த கட்டில் மீது விழுந்துள்ளது இதில் தாயும் குழந்தையும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து லோகேஸ்வரியின் கணவர் தனசேகரன், நிலைய மருத்துவ அலுவலர் அனுபமாவிடம் அளித்துள்ள புகாரில், இன்று அதிகாலை 3:30 அளவில் திடீரென்று மேல் கூரை இடிந்து விழுந்துள்ளது. அந்த சமயத்தில் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கக் கூட சம்பந்தப்பட்ட வார்டில் உதவியாளர்களோ , செவிலியர்களோ இல்லை என என புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடங்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால், பல இடங்களில் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து உள்ளதாகவும், பல இடங்களில் இதே போன்ற நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் இடிந்து விழுந்தது கட்டிடம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம், சரிவர பராமரிக்காத காரணத்தினால் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு முதல்வர் முத்துக்குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 20 ஆண்டுகள் பழமையான, அனைத்து கட்டிடங்களையும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும், கட்டிடங்களில் உறுதி தன்மை குறித்தும், புனரமைப்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், இந்த ஆய்வு முடிவில் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
ஏன் நுழைந்தோம்..ஏன் சென்றோம்.. அமெரிக்கா அடுக்கிய காரணங்கள்! Afghanistan | USA | Taliban | Joe Biden