பருவமழை பெய்யத்தொடங்கியதும் மிக கனமழை பெய்து வருகிறது. சராசரியை விட மிக அதிகமாக மழை பெய்வதால் ஏரி, குளம், குட்டை, ஆறு என எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது. அந்த வகையில் திருப்பத்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இயல்லை விட 100 சதவீதத்தை கடந்து மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், 2 நாட்களில் கடலோர மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



இதேபோல ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள் மிக வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதால், பாலாற்றில் இருந்து கால்வாய்கள் வழியாக தண்ணீர் திருப்பிவிடப்பட்டதால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை, 909 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் 891 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 



காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்ந்த முக்கிய ஏரிகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  அதில் 891 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 17 ஏரிகள் 75%-100% , 1 ஏரி 25%-50%   நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதேபோல பாலாற்று படுகையில் உள்ள  திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 23 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமிருக்கும் சில ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் இரண்டொரு நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஏரிகளும் நிரம்புவதற்கு வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

செம்பரபாக்கம் ஏரி

 

 

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியின் நீர் மட்டம், 22 அடியை கடந்துள்ளது. அதேநேரத்தில், தொடர்ந்து, 23வது நாளாக, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது . தற்போது நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், 23 வது நாளாக, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம், 22.15 அடியாகவும், மொத்த கொள்ளளவு, 3.1 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. நீர்வரத்து, 4,770 கன அடியாகவும், உபரி நீர் வெளியேற்றம், 3,-000 கன அடியாகவும் உள்ளது. அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை அதிகரிக்க கூடும் என கருதி, உபரி நீர் சீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.அதேநேரத்தில், அடையாறு ஆற்றில் உச்சமட்ட அளவு வெள்ளம் செல்வதால், உபரி நீரை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும், ஆற்றில் வெள்ளம் குறைந்த பின், அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

மதுராந்தகம் ஏரி

 

 

செங்கல்பட்டு- மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 25.1 அடியாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 29500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை முதல் வினாடிக்கு 27500 கன அடியாக குறைந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஏரியில் 720 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது ஏரிக்கு வரும் உபரி நீர் அனைத்து 110 தானியங்கி ஷட்டர் மூலமாக 25000 மற்றும் 2 அவசரகால சட்டர் மூலம் 2500  கன அடி தண்ணீர் கிளி ஆற்று வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



 

 

தென்னேரி

 

காஞ்சிபுரத்தில் பெரிய ஏரியான தென்னேரி முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் 5 கலங்கள் வழியாக 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றி வருகிறது. காஞ்சிபுரத்தில் மிக பெரிய எரியான தென்னேரி ஏரியின் முழு கொள்ளளவு 18.60 அடி ஆனால் தற்போது இருக்கும் ஏரியில் நிலையில் 20 அடி நீர் இருப்பதால் மீதம் இருக்கும் நீர்  ஏரியில் உள்ள 5 கலங்கள் வழியாக வெளியேற்றபடுகிறது. தற்போது 5 ஆயிரம் கன அடி நீர் வெளியிடப்படுகிறது. இந்த நீரானது அகரம், வாரணவாசி, கட்டவாக்கம், அவளூர், தேவரியம்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயிர்  பாசனத்திற்கு சென்று  பின் கடலில் கலகிறது. இதனால் 8000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் பயனைடைகின்றனர்.