நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடும் வகையில் வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென மத்திய,மாநில, அரசுகள் கோரிக்கை விடுத்து விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரியே உள்ள எல்லப்பா நகரில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளி நிர்வாகத்தினர் 75 ஆவது சுதந்திர தின விழாவை மாறுபட்ட வகையில் கொண்டாடிட முடிவு செய்தனர்.



 

இதைத் தொடர்ந்து மழலையர் பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மழலை குழந்தைகளை கொண்டு,12 அடி உயரமும், 36 அடி நீளமும் கொண்ட மிகப்பெரிய  வெள்ளை நிற கொடியில் மழலை குழந்தைகளின் பிஞ்சு கைகளில் பச்சை,ஆரஞ்சு, நீலம் வண்ணங்களை தடவி உள்ளங்கை பதிவின் மூலம் வெள்ளைக் கொடியில் மூன்று மணி நேரத்தில் தேசியக் கொடியை தயாரித்து சாதனை செய்தனர்.

 



பச்சிளம் குழந்தைகள் உள்ளங்கை பதிவினால் தயாரித்த இந்த தேசியக் கொடியை கலாம் சாதனை புத்தக பதிவாளர்கள் கண்காணித்து அதனை சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர். மூன்று மணி நேரத்தில் 36 அடி தேசிய கொடியை செய்து சாதனை செய்த பள்ளி நிர்வாகத்திற்கும் பங்கு கொண்ட மழலை குழந்தைகளுக்கும் கலாம் சாதனை புத்தகம் சார்பில் சான்றிதழ்களும் கேடயங்களும் பரிசாக  வழங்கப்பட்டது.

 






தேசியக்கொடி உருவாக்கிய நிகழ்வு, கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதை அறிவித்தவுடன், மழலை குழந்தைகளும், பள்ளி நிர்வாகத்தினரும், தேசிய கொடிகளை அசைத்து, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், என கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.