சென்னையை பொருத்தவரை கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்தது. சென்னையில் உள்ள மிக முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜீவ்காந்தி, ஸ்டேன்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்டது. ரெம்டெசிவர் மருந்து வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் நேரு உள்விளையாட்டு அரங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பின் தன்மையை அறிந்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்பையில் சிகிச்சைகளை அளிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டது. இதற்கு உறுதுணையாக சென்னை மாநகராட்சியும் கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்தி அறிகுறிகளின்றி கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு தொலைபேசி மூலம் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் பயிற்சி மையத்தை தொடங்கியது. 



சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ள மண்டல கட்டுப்பாட்டு மையம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் முதற்கட்ட பரிசோதனை மையங்களுக்கு மாநகராட்சி ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பரிசோதனைக்கு பிறகு தொற்று பாதிப்புகுறைவாக உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி தனிமைப்படுத்தப்படுகிறனர். 40 வயதிற்கு கீழுள்ள நபர்கள் மாநகராட்சியில் மருத்துவ குழுவின் மூலம் வீடுகளுக்குச் சென்று காய்ச்சல், சுவாசத்தின் அளவு போன்ற பலகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.



இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும் தனிமையினால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க மனநல ஆலோசனையும் வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பயிற்சி மருத்துவர்கள் மூலமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மே மாதம் 13ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மண்டல கட்டுப்பாட்டு அறையில் இருந்து பயிற்சி மருத்துவர்கள் வாயிலாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 418 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல் நிலை மற்றும் மனநலம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தொடர்ந்து ஐந்துநாட்கள் காய்ச்சல் வந்த 1,621 நபர்களுக்கும், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக அறியப்பட்ட 360 நபர்களுக்கும் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொலைபேசி வாயிலாக அழைக்கப்பட்டு விவரம் கேட்ட 165 நபர்களுக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. உடல்நல சிரமங்கள் இருப்பதாக தெரிவித்த 260 நபர்களுக்கு உடல்நல ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்