சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் உயிரிழந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்ட186 நாய்களில் 45 நாய்கள், உரிய பராமரிப்பு இன்மை, உணவுத் தரப்பாடாமை, நோய் தொற்று உள்ளிட்ட காரணங்களால் இறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இன பெருக்க அறுவை சிகிச்சை செய்வதாக சொல்லி, ஐஐடி வளாகத்தில் திரிந்த தெருநாய்களை பிடித்து, ஒரே கூண்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ஐஐடி பதிவாளர் ஜேன் பிரசாத் மற்றும் அவருக்கு துணையாக இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலரான ஹரிஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டிய நாய்களை சட்ட விரோதமாக பிடித்து, கூண்டில் அடைத்து வைத்துள்ள ஐஐடி நிர்வாகத்தினர் மீது மிருகவதை தடை சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் 236 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள ஐஐடி வளாகம், அடர்ந்த வனப்பகுதியாக இருக்கிறது. மாநகரின் மத்திய பகுதியில் இதுபோன்றதொரு காடு இருப்பது காற்றில் ஏற்படும் மாசுவை சுத்திகரிக்க பெரிதும் உதவியாகவும், ஆக்சிஜன் பெருக்கியாகவும் இருக்கும் நிலையில், ஐஐடியில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு அங்குள்ளவர்கள் இந்த அடர்ந்த வனப்பகுதியை பயன்படுத்தி வருவதாகவும் தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், வழி தவறி சாலையில் செல்லும் தெரு நாய்கள் ஐஐடி வளாகத்திற்குள் வந்தபின்னர், வெளியே செல்வதற்கான வழி பிடிபடாமல் வளாகத்திற்குள்ளேயே சுற்றி திரியும் நிலை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களும் ஊழியர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி, வளாகத்திற்குள் திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து ஒரே கூண்டுக்குள் அடைத்து வைத்து, பல நாட்கள் சித்தரவதை செய்த சம்பவம் தற்போது வெளியே தெரிந்திருக்கிறது.
ஏற்கனவே, ஐஐடியில் சாதிய பாகுபாடு, தற்கொலைகள் என பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தற்போது ஐஐடி வளாகத்தில் அடைக்கப்பட்ட நாய்களும் உயிரிழந்திருக்கின்றன.
உயிரோடு இருக்கும் மீதி நாய்களை உடனடியாக அங்கிருந்து மீட்க வேண்டும், நாய்கள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்