சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டுமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. 


சென்னையில் முக்கியமான போக்குவரத்து சாதனங்களில் மின்சார ரயில்களின் பங்கு என்பது அளப்பறியது. குறைவான கட்டணத்தில் சிரமமின்றி எளிதாக பயணம் செய்யும் வகையில் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை குறைந்த கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை, திருவள்ளூர், ஆவடி, வேளச்சேரி என பல வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 


இதில் சாதாரண கட்டணம், எக்ஸ்பிரஸ் என இருவகையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகளும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே விடுமுறை நாளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக இன்று காலை 11 மணி முதல் 3.15 மணி வரை தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் சேவை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  


இதுகுறித்து தெற்கு ரயில்வே முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு காலை 11.55, நண்பகல் 12.45, மதியம் 1.25, 1.45, 1.55, பிற்பகல் 2.40, 2.55 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள்  தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, 9.40, 10.55, 11.05, 11.30, நண்பகல் 12, 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.






ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரத்தில்  இருந்து சென்னை கடற்கரை வழித்தடத்தில் வழக்கத்தை விட கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பில் மிக முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 10 மணி முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல் வழியாக இந்த பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: Vijayadharani: காங்கிரஸால் கிடைத்த எதுவும் வேண்டாம்.. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி!