செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்துள்ள தையூர் ஊராட்சியில் அடங்கிய ஓ.எம்.ஆர். சாலையில் செங்கண்மாலீஸ்வரர் கோயில் உள்ளது. தையூா் கிராமம் செங்கன்மால் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. செங்கண்மாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான புல எண் 1384ல் பரப்பளவு 11 ஏக்கர் 74 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.



 

இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் தனியார் பில்ட் போட்டு குறைந்த விலைக்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதில் ஏராளமான ஏழை மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

 

இந்த வீட்டு கட்டடம்  போக மீதி இருந்த சுமார் 6 ஏக்கர் 74 சென்ட் நிலமானது கோயிலின் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோயில் நிலத்தின் அருகில் சென்னை தாம்பரம் விஜயன் பில்டர்ஸ் சுந்தர வடிவேல் நிலத்திற்கு பின்பக்கம் இடம் வாங்கி தனியார் ஒப்பந்ததாரர் லேவுட் போட்டு ( மனை பிரிவு) விற்பனை அவரது மனையை விற்பனை செய்வதற்காக கோயிலுக்கு சொந்தமான  நிலத்தில் 20அடி அகலம் 150அடி நீளம் ஆக்கிரமிப்பு செய்து  சாலை அமைக்கப்பட்டுள்ளன.  மற்ற இடங்களை  விளையாட்டு மைதானம் அமைக்க அங்குள்ள முள் புதர்களை அகற்றி ஆக்கிரமிப்பில் இடுபட முயற்சித்துள்ளனர்.

 



இந்நிலையில் காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலையத் துறையினருக்கு எழுந்த புகாரின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க இந்து சமய அறநிலை துறை அதிகாரி  இணை ஆணையர் வான்மதி உத்தரவின் பேரில் செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், மற்றும் செங்கண்மாலீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜி.சரவணன் மற்றும் கோயில் ஊழியர்கள் நேரில் சென்று கேளம்பாக்கம் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யபட்டு சாலை அமைக்கப்பட்ட சாலையை இரண்டு ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன. பின்னர் யாரும் அவ்விடத்திற்கு செல்லாதவாறு பாறை கற்கள் கொண்டு மதில் சுவர் எழுப்ப தொடங்கினர்.



மீதமுள்ள காலி இடத்தில், விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக சுமார் 5 ஏக்கர் நிலத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இந்த இடத்தையும் கைப்பற்றி சுவாதீனப்படுத்திய அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான இடம் என்று எச்சரிக்கைப் பலகையையும் வைத்தனர். மேலும், இந்த ஆக்கிரமிப்பு குறித்து செயல் அலுவலர் சரவணன் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதீனப் படுத்தப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 35 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கோயில் நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டு குடியெரிவரும் நிலங்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தொடர்ச்சியாக கோயில் நிலங்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பில் உட்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகளும் கவனம் கொண்டு ஆக்கிரமிப்புகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் சமூக ஆர்வலர்கள்.