மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீர் மறுநாளே வற்றினாலும், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, வடசென்னையின் பல பகுதிகளில் இன்று வரை தண்ணீர் வடியவில்லை.
22 சுரங்கப்பாதைகள்:
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் அமைந்துள்ளது. பல பகுதிகளில் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கமின்றி போக்குவரத்து இயங்கி வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கத்திவாக்கம் பிரதான சாலை சுரங்கப்பாதை, மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேஷ்புரம் சுரங்கப்பாதை, ஸ்டேன்லி மருத்துவமனை சுரங்கப்பாதை, ஸ்டேன்லி நகர் சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, ஹாரிங்டன் சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, ஜோன்ஸ் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லீ சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மவுண்ட் சுரங்கப்பாதை, தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, மீனம்பாக்கம் சுரங்கப்பாதை மற்றும் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை ஆகிய 22 சுரங்கப்பாதைகளும் தற்போது போக்குவரத்து செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கமின்றி தற்போது போக்குவரத்து சீர்செய்யப்பட்டாலும் தண்ணீர் வடியாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது துயர் எப்போது துடைக்கப்படும் என்று கண்ணீருடன் வேதனை தெரிவித்து வருகின்றனர். அரசு சார்பில் அந்த பகுதிகளில் தண்ணீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: Rain Alert: மிக்ஜாமில் இருந்தே இன்னும் மீளல.. அதுக்குள்ள அடுத்ததா? வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஷாக்!
மேலும் படிக்க: Jayakumar: தைரியம் இருக்கா? முத்து படம் ஓடுவதற்காக அம்மாவைப் பற்றி பேசுவதா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்