காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறையில் அலுவலராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (40). இவர்களுக்கு இரட்டையர்களான பூர்ணிமா, பூர்வீகா (4) என்ற குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொள்ள பைக்கில் மனைவி, குழந்தைகளை பழனி அழைத்து சென்றுள்ளார்.
ஓரிக்கை காந்திநகர் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. 4 பேரும் பைக்குடன் தூக்கிவீசப்பட்டனர். இதில், தலை துண்டித்து வித்யாவும், பூர்ணிமாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வந்து, படுகாயத்துடன் இருந்த பழனி, பூர்வீகா ஆகியோரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், வித்யா, பூர்ணிமா ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய டாரஸ் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையும், மனைவி தலைதுண்டித்தும் இறந்த சம்பவம் காஞ்சிபுரம் அருகே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்குவாரி வாகனம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பாக உத்திரமேரூர் அதனை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கல்குவாரி டாரஸ் லாரிகள், காஞ்சிபுரம் நகர் பகுதி மற்றும் காஞ்சிபுரம் நகரத்தின் வெளிப்பகுதிகளில் சென்று வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இது போன்ற கல்குவாரி வாகனத்தால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இது குறித்து தொடர்ந்து உரிய விசாரணை நடத்த வேண்டும், வாகனங்கள் செல்லும் வழியை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்