புதிய டாக்ஸி வேக்களில், முதலில் வந்து தரை இறங்கிய விமானங்களுக்கு, வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில், ஒரு மணி நேரத்தில் கூடுதல் விமானங்கள் தரையிறங்க, புறப்பட முடியும். அதோடு விமானம் வானில் பறப்பதற்கு முன்பு, தரையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும்.
சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக பயணிகள் விமானங்கள் வந்து தரையிறங்குவதற்கு, முதலாவது விமான ஓடு பாதையும், சிறிய ரக விமானங்கள் தரையிறங்குவதற்கு, இரண்டாவது விமான ஓடுபாதையும் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் இரண்டு விமான ஓடு பாதைகளையும், ஒரே சமயத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதலாவது பிரதான ஓடுபாதையை, விமானங்கள் புறப்பாட்டிற்காகவும், இரண்டாவது ஓடு பாதையை, விமானங்கள் தரையிறங்குதல், மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு, ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஓடுபாதைகளில் தரையிறங்கும் விமானம், அதிலிருந்து விரைவாக வெளியேறும் வகையில், ரேப்பிட் எக்ஸிட் டாக்ஸி வழி அமைக்கும் பணி, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில் நடந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 4 ரேப்பிட் எக்ஸிட் டாக்ஸி வழிகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வழி என்பது, டாக்ஸி வழிக்கும், விமான ஓடுபாதைக்கும் இடையில் இருக்கும் பகுதி. தற்போது பிரதான ஓடுபாதையில், ஒரு மணி நேரத்தில், 30 க்கும் அதிகமான விமானங்கள் கையாளப்படுகின்றன. அப்போது, அடுத்தடுத்த விமானங்கள், உடனடியாக தரையிறங்க வசதியாக, இந்த ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வழிகள் பயன்படுத்தப்படும்.
மொத்தம் நான்கு ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வழிகளில், இரண்டின் பணிகள் முழுமையடைந்துள்ளன. இதன்படி, தற்போது, இசட் மற்றும் டி ஆகிய, இரண்டு ரேபிட் எக்ஸிட் டாக்ஸிவேக்கள் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், இசட் எக்ஸிட் டாக்ஸி வழியில், தரையிறங்கும் விமானங்கள், டாக்ஸி வழிக்குள் செல்வதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது.டி டாக்ஸி வே, உள்நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் இன்று காலையிலிருந்து பயன்பாட்டிற்கு வந்த புதிய, இசட் மற்றும் டி ஆகிய ரேபிட் இசட் டேக்ஸிவேக்களில், முதலாவது வந்து தரை இறங்கிய விமானங்களுக்கு, சென்னை விமான நிலையம் சார்பில் வாட்டர் சல்யூட், எனப்படும் தண்ணீர் பீச்சி அடித்து, விமானங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பக்கங்களிலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நின்று கொண்டு, தண்ணீரை பீச்சி அடித்து, புதிய டாக்ஸி வேக்களில் தரையிறங்கிய விமானங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த டாக்ஸிவேக்களால், விமான ஓடுபாதைகளில் ஓடும் விமானங்கள், வானில் பறக்கத் தொடங்குவதற்கு முன்னதாக, தரையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும். இதனால் விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து, தாமதம் இல்லாமல் குறித்த நேரமோ, ஓரிரு நிமிடங்கள் முன்னதாகவோ புறப்பட்டு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு 40 விமானங்களுக்கு மேல் இயக்க முடியும். சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில், பணிகள் நடந்து கொண்டிருக்கும், மற்ற இரு, ரேபிட் எக்ஸிட் டாக்ஸி வேக்களின் பணிகள் நிறைவடைந்த பின்பு, சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில், மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.