வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி போடப்பட்டது , பிறகு படிப்படியாக அனைத்து வயதினருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது .
இரண்டாம் அலையின் தொடக்கம் முதல் , வேலூர் மாவட்டத்தில் 0-14 வயதுடையர்கள் 790 நபர்களும் , 15 -18 வயதுடையர்கள் 499 நபர்களும் , 19 -30 வயதுடையவர்கள் 4746 நபர்களும் , 31 -40 வயதுடையர்கள் 5052 நபர்களும் , 41 -50 வயதுடையவர்கள் 4 ,409 நபர்களும் , 51 -60 வயதுடையவர்கள் 4 ,122 நபர்களும் , 61 -70 வயதை நிரம்பியவர்கள் 2728 நபர்களும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
கோவிட் தொற்றர்களின் பாசிட்டிவிட்டி சதவீதத்தை பொறுத்த வரையில் வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது 8 .8 % ஆக அதிகரித்துள்ளது .வேலூர் மாவட்டத்தில் கிராமப் புறப்பகுதிகளில் உள்ள 1974 குக்கிராமங்களில் 794 கிராமங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு , இதில் 48 கிராமங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோய் தொற்றாளர்கள் உள்ளனர். நகர்ப்புறங்களை பொறுத்தவரையில், வேலூரில் உள்ள 3007 வீதிகளில் 1285 வீதிகள் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு, 98 வீதிகளில் மூன்றுக்கும் அதிகமான கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் , நேற்று (திங்கட்கிழமை ) வரை 2 ,49 ,071 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு நிலையில் இன்று நடத்தப்பட்ட பல்வேறு தடுப்பூசி முகாம்கள் மூலம் 2 ,000, கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை 2 .51 லட்சம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் .
கொரோனா இரண்டாவது அலை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக தினமும் அதிக அளவிலான பொதுமக்கள் குறிப்பாக 18 -44 வயதுடையவர்கள் ஆர்வமாய் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர் .
அதன்காரணமாக வேலூர் மாவட்டத்துக்கு வந்த ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது தடுப்பூசிகள் எதுவும் கையிருப்பு இல்லை. மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசிகள் வழங்கினால்தான் கொரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிகள் ஓரிருநாளில் வர உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.