கேரள தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 16ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறுமா? தமிழகத்தை நோக்கி நகருமா என்பது பற்றி உருவான பிறகே கணிக்க முடியும். 


கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையிலும் தமிழகத்தில் பெரும்பாலான இடத்தில் மழை பெய்துள்ளது...மூன்று இடங்களில் மிக கனமழையும் 32 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரையிலும் இயல்பை விட 16 %  அதிகமாக மழை பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள், தமிழ்நாடு காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


கேரள -  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 


14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


16.11.2022 மற்றும் 17.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருத்தணி   (திருவள்ளூர்) 13, கொடுமுடி   (ஈரோடு) 12, மதுராந்தகம்   (செங்கல்பட்டு), திண்டிவனம்   (விழுப்புரம்) 11, திருத்தணி PTO    (திருவள்ளூர்), சூளகிரி   (கிருஷ்ணகிரி), ஆலங்காயம்   (திருப்பத்தூர்), நாட்றம்பள்ளி   (திருப்பத்தூர்) தலா 10, சின்னார் அணை   (கிருஷ்ணகிரி), ஊத்துக்கோட்டை   (திருவள்ளூர்), கொடைக்கானல் படகு குழாம்   (திண்டுக்கல்), குன்றத்தூர்   (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் ARG   (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


14.11.2022: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


16.11.2022: தென் கிழக்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


17.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.