கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நண்டுக்குழி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன் (49). இவர் தான் வைத்திருக்கும் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் சிறிது நாட்களுக்கு முன் விண்ணப்பித்து இருந்தார். பின் இதற்கான நடவடிக்கைகளை காட்டுக்கூடலூர் ஊராட்சியை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி செண்பகவள்ளி கவனித்து வந்தார். 



இதையடுத்து ஒருநாள் பட்டா மாற்றத்திற்கான உத்தரவை பெறுவதற்காக ஹரிகிருஷ்ணன் கிராம நிர்வாக அதிகாரி செண்பகவள்ளியை அணுகினார். அப்போது செண்பகவள்ளி, பட்டா மாற்றம் செய்து தருவதற்கு 10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும், பணம் தரவில்லையென்றால் பட்டா மாற்றம் செய்து தரமுடியாது எனவும் ஹரிகிருஷ்ணனிடம் கூறி உள்ளார். அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பணம் வந்தால் தான் பட்டா கிடைக்கும் என கூறியுள்ளார், பின் ஹரிகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதை அடுத்து 2 ஆயிரத்தை குறைத்து கொண்டு 8 ஆயிரம் தருமாறு செண்பகவள்ளி ஹரிகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், நாளை பணம் தருவதாக கூறிவிட்டு சென்று இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். தொடர்ந்து அதற்கு பின் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ஹரிகிருஷ்ணன் நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த செண்பகவள்ளியிடம் ரசாயன பொடி தடவிய 8 ஆயிரத்தை கொடுத்து உள்ளார்.

 


 

அதை செண்பகவள்ளி வாங்கிய போது, அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மெல்வின்சிங் தலைமையிலான போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.அவரை கைது செய்த பிறகு, பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் கணக்கில் வராத 12.5 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்திற்கு சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி வீட்டில் இவ்வளவு பணம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

இவ்வாறு மக்களின் பணத்தினை தங்களின் சுய லாபத்திற்காக தங்களின் அரசாங்க பதவிகளை உபயோகம் செய்வோரை மக்கள் தைரியமாக முன் வந்து அடையாளம் காட்ட வேண்டும், அரசாங்க பதவிகளை துஸ்பிரயோகம் செய்து தினசரி தாங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் மக்களிடம் கொள்ளை அடிக்கும் இது போன்ற அதிகாரிகளின் மீது கடுமையாக தண்டனைகள் பாய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.