சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கிச் செல்லும் மாநகர அரசு பேருந்து சின்னமலை வழியாக நேற்று காலை 8.40 மணியளவில் சென்றுள்ளது. அப்போது அதே வழியாக இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த முகமது யூனுஸின் வாகனம் தனியார் விடுதிக்கு எதிரே சாலையில் உள்ள மழை நீர் தேங்கி நின்ற பள்ளத்தில் இறங்கியதால் நிலை தடுமாறியுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்துக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதால், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது மாநகரப் பேருந்தின் இடையே சிக்கி பின் சக்கரம் தலையில் மீது ஏறிச்சென்றதால் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் ராமாபுரத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் (31) என்ற ஐ.டி ஊழியர் விபத்தில் பலியானது தெரிய வந்துள்ளது. சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சியினை அடிப்படையாக வைத்து பேருந்து ஓட்டுநர் தேவராஜை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வைரலான நிலையில், சாலைகளின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடி சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதனிடையே போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிர் பலி வாங்கிய பள்ளத்தை உடனடியாக ஏன் சீர் செய்யவில்லை என்று நெடுஞ்சாலைத்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீசை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவசரமாக விபத்து நடந்த பள்ளத்தை சரி செய்தனர். இளைஞரின் உயிரை பறித்த சாலையில் இருந்த பள்ளத்தை கற்களை போட்டு அவசரமாக மூடி சரி செய்யப்பட்ட நிலையில், மழை காரணமாக மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.
இருசக்கர வாகனத்தில்செல்வோர் திடீர் பள்ளத்தில் நிலைகுலைந்து விபத்தில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அரசு உடனே இந்த விஷயத்தில் சாலை அமைக்கும் ஒப்பந்ததார்களுக்கு பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தார்கள். பல லட்சம் பேர் தினமும் பயன்படுத்தும் சாலை மோசமான தரத்தில் இருந்தால் அதை சரி செய்ய வேண்டியது நெடுஞ்சாலை துறை பொறுப்பு என்பதால் விபத்து நடந்த இடத்தில் மட்டுமின்றி விபத்து நடக்க வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து நிரந்தரமாக பள்ளங்களை சரிசெய்து சாலையை தரமானதாக மாற்ற வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே சென்னையில் மாதவரம் பால்பண்ணை காலணி பகுதியில் சாலைகளில் உள்ள பள்ளத்தை மூடும் பணியினை நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்யும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைதுறை இறங்கி உள்ளது. இதற்காக 1000 பணியாளர்களை களத்தில் இறக்கி ஆபத்தான பள்ளங்களை மூடும் பணி வேகமாக நடந்து வருகிறது. சென்னையின் 15 பகுதிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு எல்லா குழிகளும் மூடப்படும் வேலை விரைந்து நடந்துகொண்டுள்ளது.