இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், மற்ற விமானங்களில் கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்ததால், பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இண்டிகோவிற்கு எதனால் இந்த பிரச்னை.?
விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, இண்டிகோ நிறுவனம் பணியாளர்கள் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. உள்ளாட்டு விமான பயணங்களில், விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி, பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது. அதோடு, முன்பு விமானிகளின் விடுப்பு நேரம் வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்த நிலையில், தற்போது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தன. ஆனால், இண்டிகோ நிறுவனம் எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல் மெத்தனம் காட்டியதாக, விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.
இதனால், உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கிவரும் இண்டிகோ நிறுவனம், கடும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அந்நிறுவனத்தின் விமானங்கள் தாமதமாவது மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்படுவது காரணமாக பயணிகள் தவித்தனர்.
இந்நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி, மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன. இதையடுத்து, விமான கட்டணங்களுக்கான உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்து, அதை கண்காணித்தும் வருகிறது.
சென்னையில் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்ட 100 விமானங்கள்
இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் இன்று 6-வது நாளாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் ம்ட்டும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன- இதனால், பயணத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதனிடையே, மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட்டுகளின் விலையை 5 மடங்கு வரை அதிகரித்துள்ளதால், பணயிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
மத்திய அரசு தலையீட்டால் விரைவில் தீர்வு
இண்டிகோ விமான நிறுவன பிரச்னை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்ட நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், விமானங்கள் ரத்து படிப்படியாக சரியாகும் என கூறப்படுகிறது. அதுவரை பணியாளர் பணி நேர கட்டுப்பாடுகள் விலக்கி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அட்டவணைகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கி, அடுத்த 3 நாட்களுக்குள் முழுமையாக சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.