Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயிலில் நாள் முழுவதும் பயணம் செய்ய 100 ரூபாய் சிறப்பு டிக்கெட்டை  அறிமுகப்படுத்தியுள்ளது மெட்ரோ நிர்வாகம்.


சென்னை மெட்ரோ ரயில்:


சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. 


அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்தனர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. ஏற்கனவே பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது.


100 ரூபாய் டிக்கெட்:






 இதில் அடுத்தக்கட்டமாக மெட்ரோ ரயிலில் நாள் முழுவதும் பயணம் செய்ய 100 ரூபாய் சிறப்பு டிக்கெட்டை  அறிமுகப்படுத்தியுள்ளது மெட்ரோ நிர்வாகம். அதன்படி, 100 ரூபாயில் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும்படி டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாள் சுற்றுலா அட்டையை 150 ரூபாயை கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் வைப்புத்தொகை 50 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சுற்றுலா அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லும் எனவும் அட்டையை ஒப்படைத்தவுடன் 50 ரூபாய் வைப்புத்தொகை திருப்பி தரப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.


அண்மையில் வந்த வசதி:


 பேடிஎம் செயலியில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பேடிஎம் செயலியில் சென்னை மெட்ரோ என சர்ச் செய்து அதிலேயே டிக்கெட் பெற முடியும். மெட்ரோ ஸ்டேஷனில் இந்த டிக்கெட்டை ஸ்கேன் செய்து பயணம் செய்ய முடியும்.  இந்த வசதி பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த சேவைகள் தற்போது 20% கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.