கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் நரம்பியல் மருத்துவர் சைமன். இவரின், உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவரின் உடல் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா அதிகரித்து வந்த அந்த நேரத்தில், மருத்துவர்களே கடவுளாக தெரிந்தனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் காப்பற்றினர். ஆனால், கொடிய வைரஸான கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரையே அடக்கம் செய்யாமல் தடுத்த நிகழ்வு அப்போது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 40 பேரை அண்ணாநகர் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்டதோடு, இந்த சம்பவத்துக்கு கண்டனமும் தெரிவித்தது. மேலும், பல உத்தரவுகளை பிறப்பித்தது.
இதையடுத்து, அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யக்கோரி அவரது மனைவி ஆனந்தி சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்தார். ஆனால், அவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பாக மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் அந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், ‘ஆவடி வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட மருத்துவர் சைமனின் உடலை பாதுகாப்புடன் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதனை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.