செங்கல்பட்டு மாமல்லபுரம் பகுதியில் பார்க்கிங் விடுவதில் ஏற்பட்ட தகராறில், செக்யூரிட்டி சரமாரியாக தாக்கிய இரண்டு பெண்கள் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


மாமல்லபுரம் சுற்றுலா தலம்


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் இருந்த கார் ஒன்று, அங்கு காரை பார்க் செய்ய செல்ல முயன்றது. அந்த காரை அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும், நோ என்டிரி வழியாக கார் செல்லக்கூடாது என்று ஐந்துரதம் வணிக வளாக வாகன நிறுத்துமிட செக்யூரிட்டி ஏழுமலை (வயது49) என்பவர் அந்த காரை வழிமறித்து நின்றார். 


" ஏய் யாரை பார்த்து பேசுகிறாய் "


அப்போது அவரை இடிப்பதுபோன்று, அவரின் சொல்லை மீறி அந்த கார் நோ என்ட்ரியில் செல்ல முயன்றது. அப்போது காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை ஏதோ திட்டியதாக தெரிகிறது. உடனே காரில் இருந்து இறங்கிய டிப்-டாப் உடை அணிந்திருந்த 2 பெண்களும் ஏய் யாரை பார்த்து பேசுகிறாய் என்கிறாய் என ஆவேசமடைந்து, பெண்கள் காரைவிட்டு திபுதிபுவென கீழே இறங்கினர். 


பிளாஸ்டிக் பைப்பை பிடுங்க


அவர்கள் ஆவேசமடைந்து நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். உடன் வந்த 2 ஆண்களும் சேர்ந்து நடுரோட்டில் அந்த வாகன நிறத்துமிட செக்யூரிட்டியை கடுமையாக தாக்கினர். செக்யூரிட்டி பதிலுக்கு அந்த பெண்களை தாக்க முயற்சி செய்த போதும், ஒன்னும் செய்ய முடியவில்லை. பதிலுக்கு அவர் தாக்க முயற்சிக்கவே, 4 பேரும் கீழே தள்ளி கும்மாங்குத்து குத்தி அவரை நைய புடைத்தனர். அதில் ஒரு பெண் பணியாளர் ஏழுமலை வைத்திருந்த 2 அடி நீள பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் அளவுக்கு அதனால் அவரை தாக்கி, அவரது சட்டையை கிழித்தனர்.


சினிமாவில் வருவது போன்ற..


மற்றொரு பெண் ஸ்டண்ட் மாஸ்டர் போல் போல் காலால் எட்டி உதைத்து தாக்கினார். அடி-உதையில் அவர் வலியில் கதறினார். இந்த கைகலப்பு சம்பவத்தால் அந்த ஏரியாவே பரபரப்பானது. பிறகு அவ்வழியாக சென்றவர்கள் காரில் சுற்றுலா வந்து 4 பேரையும் சமாதானம் செய்தனர். பிறகு காமெடி நடிகர் வடிவேலு போல் அவர்களிடம் அடிஉதை வாங்கிய ஏழுமலையை அவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றி அங்கி போக செய்தனர். பிறகு 2 பெண்கள் உள்ளிட்ட 4 சுற்றுலா பயணிகளும் அவர்கள் வந்த காரில் அங்கிருந்து சென்று விட்டனர். சினிமாவில் வருவது போன்ற இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற மற்றொரு சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை இந்த வீடியோ வெளியாகி ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது: வீடியோ குறித்து கவனத்திற்கு வந்திருப்பதாகவும், இப்போது நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்தவித புகார்களும் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.