வடநெம்மேலி பாம்பு பண்ணைக்கு 10 மாதங்களுக்கு பிறகு கண்ணாடி விரியன், நல்லபாம்பு பிடிக்க மத்திய வனத்துறை அனுமதி வழங்கியதை அடுத்து வயல்வெளிகளில் சென்று கண்ணாடி விரியன், நல்லபாம்பு ஆகிய விஷ பாம்புகளை பிடிக்கும் பணிகளில் பழங்குடி இருளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாமல்லபுரம் பாம்பு பண்ணை -mamallapuram Sanke farm
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பாம்பு பண்ணையில் உறுப்பினராக உள்ள பழங்குடி இருளர்கள் 350 பேர் விஷ பாம்புகள் பிடித்து இங்கு கொடுத்து வருகின்றனர். இந்த பண்ணைக்கு கொண்டு வரப்படும் நல்லபாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன் ஆகிய 4 விஷ பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதிலிருந்து விஷம் எடுக்கப்பட்டு, மருந்து தயாரிக்க அவை பயன்படுத்தப்படுகிறது.
பாம்பு பிடிக்க திடீர் தடை
இந்த பாம்பு பண்ணைக்கு புதுடெல்லியில் உள்ள மத்திய வனத்துறை இயக்குனரகம் இந்தாண்டு (2024) திடீரென கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் நல்லபாம்பு, கண்ணாடி விரியன் பாம்பு பிடிக்க தடை விதித்து இருந்தது. அதனால் கடந்த 10 மாதமாக கண்ணாடி விரியன், நல்லபாம்பு ஆகிய 2 விஷ பாம்புகள் இல்லாமல் கட்டுவிரியன், சுருட்டை விரியன் ஆகிய இரண்டு விஷ பாம்புகளை வைத்துதான் வடநெம்மேலி பாம்பு பண்ணை செயல்பட்டு வந்தது.
சுற்றுலா சீசனில்..
அதனால் வடநெம்மேலி பாம்பு பண்ணையில் கட்டுவிரியன், சுருட்டை விரியன் என 2 வகையை சேர்ந்த 3500 பாம்புகள் மட்டுமே மண் பானைகளில் பராமரிக்கப்பட்டு விஷம் எடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 4 மாதங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வரும் சீசன் மாதம் என்பதால் இங்கு வரும் வெளிநாட்டு பயணிகள் நல்ல பாம்புக்கு விஷம் எடுப்பதையும், அலை படமெடுத்து ஆடுவதையும் ஆர்வமாக பார்த்து ரசிப்பர்கள்.
அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் இருளர்கள்
அதனால் வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிக்க நல்லபாம்பு மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகள் பிடிக்க டெல்லியில் உள்ள மத்திய வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும், மறுபுறம் இக்குறிப்பிட்ட பாம்பு பிடிக்க தடை உள்ளதால், நல்லபாம்பு பிடிக்கும் பழங்குடி இருளர்களும் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து மத்திய வனத்துறை நிர்வாகம் 10 மாதங்களுக்கு பிறகு தடையை நீக்கி நல்லபாம்பு, கண்ணாடி விரியன் பாம்பு பிடிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து தற்போது பழங்குடி இருளர்கள் வடநெம்மெலி பாம்பு பண்ணைக்கு வழங்க புதர்கள், வயல்வெளிகளுக்கு சென்று நல்லபாம்பு, கண்ணாடி விரியன் பாம்புகள் பிடிக்கும் பணியில் ஈடுட்டுள்ளனர்.
இதுகுறித்து இருளின மக்கள் கூறுகையில், பல நூற்றாண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலில் இருளர்கள் ஈடுபட்டு வருகிறோம். பாம்பு பிடிக்கும் பண்ணை துவங்கியதில் இருந்து பாம்பு பிடிப்பது கௌரவமான தொழிலாக மாறி உள்ளது. நாங்கள் பிடிக்கும் பாம்பை வைத்து மருந்து தயாரித்து பல உயிர்கள் காப்பாற்றப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. சமீபத்தில் பாம்பு பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், வாழ்வாதாரமில்லாமல் தவித்து வந்த தற்போது மீண்டும் அனுமதி கொடுத்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தனர்.