சென்னைக்கு அருகே உள்ள தாம்பரம் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் 18 ஊராட்சிகள் இணைய உள்ளது.
இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் இன்றி அமையாது ஒன்றாக உள்ளது. ஊராட்சி அமைப்புகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களும், அதிகமாக இருப்பதால் உள்ளாட்சி அமைப்பு கட்டமைப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு மாநகராட்சி, நகராட்சி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியுடன் உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க உள்ளனர். இதன் மூலம் நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைப் பரப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி
சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய தாம்பரம் கடந்த 2021 ஆம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளையும், சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் தற்போது 70 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியாக இருந்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சியின் மேயராக திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வசந்தகுமாரி பதவி வகித்து வருகிறார்.
சென்னைக்கு அடுத்து சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மிக முக்கிய மாநகராட்சியாக தாம்பரம் வளர்ந்து வருகிறது. தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி வளர்ந்து வருவதால், தாம்பரம் மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மூலம் நிர்வாக ரீதியாக ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்போது தாம்பரம் மாநகராட்சியில் மக்கள் தொகை 7.23 லட்சமாக உள்ளது . தாம்பரம் மாநகராட்சி பரப்பளவு 87.64 சதுர கிலோமீட்டர் ஆக உள்ளது. அந்த வகையில் தாம்பரம் மாநகராட்சியில் 18 ஊராட்சிகள் இணைய உள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில் இணையும் ஊராட்சிகள்
தாம்பரம் மாநகராட்சியில் ஊரப்பாக்கம் , வண்டலூர், திருவாஞ்சேரி, அகரம்தென், மதுராப்பாக்கம், ஒட்டியபாக்கம், சித்தாலப்பாக்கம் , பெரும்பாக்கம், வேங்கை வாசல், மேடவாக்கம், நன்மங்கலம் , கோவிலம்பாக்கம், முவரசம்பட்டு , திரிசூலம் , காவர் பஜார், பொழிச்சலூர், முடிச்சூர், வேங்கடமங்கலம் ஆகிய 18 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை 2.85 லட்சமாக உள்ளது.
இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சி எல்லை கூடுதலாக 84.7 சதுர கிலோமீட்டர் இணைய உள்ளது. இதனால் தாம்பரம் மாநகராட்சியில் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்ட உள்ளது. மேலும் தாம்பரம் மாநகராட்சியின் மொத்த சதுர பரப்பளவு எண்ணிக்கை 172.34 ஆக உயர உள்ளது.
விரிவடையும் தாம்பரம் மாநகராட்சி
மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுவதால், மாநகராட்சியில் எல்லை அதிகரிப்பதால், மாநகராட்சிக்கு வருவாய் பெருகும். காஞ்சிபுரம் மாநகராட்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், மாநகராட்சி சுற்றியும் வளர்ச்சியை பெருக்க உதவும். மேலும் குடிநீர், தூய்மை பணி உள்ளிட்டவை முறையாக நடைபெறும். மாநகராட்சியுடன் இணைவதால், சொத்து வரி உள்ளிட்டவை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சி, மாமன்ற உறுப்பினர் எண்ணிக்கையும் கணிசமாக உயர உள்ளது. குறிப்பாக 40 முதல் 50 மாமன்ற உறுப்பினர்கள் கூடுதலாக தாம்பரம் மாநகராட்சிக்கு கிடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் வருகின்ற ஜனவரி மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.