Singaperumal Koil Flyover Opening Date: தென் தமிழகத்தையும் சென்னையும் இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஜி.எஸ்.டி சாலை என அழைக்கக்கூடிய இந்த சாலையில் பெருங்களத்தூரில், இருந்து செங்கல்பட்டு வரை பல்வேறு இடங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
 

20 ஆண்டுகளாக கோரிக்கை 

 
அதன் ஒரு பகுதியாகதான் செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் இரயில்வே பாலம் கட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது‌. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இந்த சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில், இரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்திருந்தார்.
 

சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலம் - Singaperumal Koil Bridge 

 
அதன்படி மறைமலைநகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த 2006-07ல் ஒப்பந்தப்புள்ளி எடுக்கப்பட்டன. இதற்கு, அரசு ரூ52.80 கோடி நிதி ஒப்புதல் வழங்கி கடந்த 2011 பிப்ரவரி 28ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது.  இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பக்கமுள்ள பாலப்பகுதி மட்டும், கடந்த 2013 ஆகஸ்ட் 28ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது.
 

நிறுத்தப்பட்ட பணிகள்

 
அப்போது இப்பணிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று கிடைக்கப்பெறாததால், மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சென்னை எல்லை சாலை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டதால், இத்திட்டத்துடன் மறைமலைநகர் - சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும் இணைக்க உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டு, பாலப்பணியில் அதற்குரிய மாற்றப்பட்டன மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கு, கடந்த 2016 ஜூன் 3ம் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டது.
 

மீண்டும் தொடங்கப்பட்ட சிங்கப்பெருமாள் கோயில் பாலம்

 
2021 வரை மேம்பாலப்பணிகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு மீண்டும் இந்த பணிகளை துவங்க முடிவு செய்தது. இதன் திட்டமதிப்பீடு ரூ138 கோடி என்கிற நிலையில், ரூ90.74 கோடி மதிப்பில் இப்பால பணிக்கு கடந்த 2021 ஜூன் 10ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. 
 
இந்த பாலம் 740 மீ நீளம், 7.50 மீ அகலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பாலப்பணிகளை 30 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஒரு பகுதி பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 
 

சிறப்பு அம்சங்கள் என்னென்ன? Key Features of singaperumal koil bridge

 
இந்நிலையில் ஜிஎஸ்டி சாலை வழியாக செல்லும் வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட்டை கடந்து தான் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், ஆப்பூர், பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். 
 
இந்த ரயில்வே கேட் ஒரு  நாளைக்கு 30 முறைக்கும் மேல் மூடப்படுவதால், ஒவ்வொரு முறையும் ஒரகடம் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
 
குறிப்பாக ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மறைமலைநகர் மற்றும் மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் சரக்குகளை ஏற்றி செல்வதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்படும். 
 
சிங்கப்பெருமாள் கோயிலில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் உள்ளூர் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது திருச்சி - சென்னை மார்க்கமாக உள்ள பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 
 
அதே போன்று இந்தப் பகுதியில் இருந்து, ஒரகடம் செல்வதற்கான பாலத்தின் வழியும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-வருடங்களாக கட்டப்பட்டு வரும் இப்பாலம் திறக்கப்பட்டால், 20 ஆண்டுகால தலைவலிக்கு தீர்வாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது ? Singaperumal Koil Bridge Opening Date 

 
சிங்கப்பெருமாள் கோயில் பாலம் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டு இருப்பதால், ஒரு வழியாக பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.