"பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டு, தீவிரவாத அமைப்பிற்காக வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது"

லஷ்கர்-இ-தொய்பா

உலக அளவில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாத அமைப்புகள், ஒரு சில நாடுகளின் வளர்ச்சியை தடுப்பதற்காகவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உலகில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பாக, லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) தீவிரவாத அமைப்பு இருந்து வருகிறது. இந்த தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ஜம்மு காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரித்து, பாகிஸ்தானுடன் இணைப்பதற்காக பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை உலகளாவிய பல்வேறு நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பல நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் செயல்பட்ட இந்தியாவை சேர்ந்த ஒரு சிலரும் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டில் சிக்கிய ஸ்லீப்பர் செல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது (22), என்பவரை தமிழ்நாடு காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த முகமது இந்தியாவில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சார்ந்த பயங்கரவாதி என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து தற்போது இவரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதாரண கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், எப்படி இந்த இயக்கத்தில் சேர்ந்தார். தீவிரவாதி இயக்கத்தில் பணியாற்ற எங்கெங்கெல்லாம் பயிற்சி பெற்றார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் ?

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த முகமதுவிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், முகமது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் என தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தாலும், தன் வருமானத்தில் 40% வரை சேமிக்கும் பழக்கத்தை கொண்டவராக இருந்து வந்துள்ளார். இந்த சேமிப்பு பணத்தின் மூலம் வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக சேமித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

முகமதுவிடமிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்கள் மூலம் போலீசாருக்கு முக்கிய சதி திட்டங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத் குறித்த தகவல்களும் பகிர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. யோகி ஆதித்தனத்தை குறிவைத்து சதி செயலில் ஈடுபட்டாரா? என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.‌

கிரிப்டோ கரன்சியில் பண பரிவர்த்தனை 

தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் அவர் பதுங்கி இருந்த இடங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் யாரிடம் நெருங்கி பழகினார் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கிரிப்டோ கரன்சி மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டில் கைது செய்யப்பட்ட கூலித் தொழிலாளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்காக, செங்கல்பட்டில் ஸ்லீப்பர் செல்லாக கூலி தொழிலாளி ஒருவர் பணியாற்றி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.