திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்த போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் மயங்கி விழுந்து, உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல பள்ளி தாளாளர் இல்ல திருமண நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விமர்சியாக நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு

அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் கடை உரிமையாளர் ஞானம் அவர்களின் மனைவி ஜீவா மாமல்லபுரத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்த போது, திடீரென மராப்டைப்பு ஏற்பட்டு நடமாடிக்கொண்டே மயங்கி விழுந்தார்.

அங்கு உள்ளவர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்தும் கண் முழிக்காததால், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதியிலே மரணம் அடைந்ததால், திருமண நிகழ்ச்சியில் சோகதத்தை ஏற்படுத்தியது. நடமாடிக்கொண்டே இருக்கும் போது பெண் ஒருவர் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது‌.

சோகத்தில் முழுங்கிய திருமண நிகழ்ச்சி

இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நொடிகள் மகிழ்ச்சியாக நடனமாடும் ஜீவா அடுத்த சில நொடிகளில், தலை சுற்றுவதை போல் தலையில் கை வைத்து விட்டு, அப்படியே மேடையில் மயங்கி விழுந்தார். இதனால் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், பாடகர் வேல்முருகன் அங்கிருந்து அனைவரையும் மகிழ்ச்சியாக பாடலுக்கு நடனம் ஆடும்படி அழைத்தார். அதன் அடிப்படையில் சென்ற ஜீவாவிற்கு இந்த சோகம் நேர்ந்ததாக தெரிவித்தனர்.

நடனம் ஆடுபவர்களுக்கு என்ன ஆபத்து?

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், நடனம் போன்ற அதிக உடல் உழைப்பு தேவைப்படும் செயல்களில் ஈடுபடும்போது, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் தேவை ஆகியவை அதிகமாகிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் இதயத்தை கடுமையாக பாதித்து, திடீரென மயக்கமடையச் செய்து உயிரிழப்புக்கு வழிவகுக்கும். 

இதனால் நடனம் ஆடுபவர்களுக்கு மாரடைப்பு (cardiac arrest) அல்லது இதய செயலிழப்பு (heart failure) போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழலாம் என தெரிவிக்கின்றனர். ஹைபர்ட்ரோபிக் கார்டியோமயோபதி (Hypertrophic Cardiomyopathy)‌ என்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு இதயத்தின் ரத்தப் பம்பிங் திறன் குறைந்து, திடீரென மயக்கம் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்