Chengalpattu Railway Station: செங்கல்பட்டு ரயில் நிலையம் தனது புதிய தோற்றத்தை விரைவில் பெற உள்ளது.
இந்தியாவும் ரயில் போக்குவரத்தும்
உலக அளவில் ரயில் போக்குவரத்தில் இந்தியா தனித்துவமான இடத்தை பிடித்து வருகிறது. குறைந்த விலையில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, ரயில் போக்குவரத்து வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல, 70க்கும் மேற்பட்ட விரைவு ரயில் தென்னக ரயில்வே இயக்கி வருகிறது. தொடர்ந்து தென்னக ரயில்வே சார்பில், பல்வேறு ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
வளர்ந்து வரும் செங்கல்பட்டு மாவட்டம் - Chengalpattu
சென்னை புறநகர் பகுதியாக செங்கல்பட்டு இருந்து வருகிறது. செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. தொடர்ந்து வெளியூர் மக்களின் குடியேற்றமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐ.டி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிக அளவு குடியேறி வருகின்றனர்.
சென்னை புறநகரில் இருக்கும் மிக பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ள செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து, சென்னை கடற்கரை வரை செல்லக்கூடிய மின்சார ரயில்களை பயன்படுத்தும், பொது மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை தினமும் சுமார் 60 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்திற்கு செல்வதற்கு பிரதான ரயில் நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது.
செங்கல்பட்டு ரயில் நிலையம் மறு சீரமைப்பு - Chengalpattu Railway Station Redevelopment
வளர்ந்து வரும் செங்கல்பட்டு கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு ரயில் நிலையம் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை மறு சீரமைக்க ரூபாய் 22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை, நவீனமாக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன? Key Features
புதிய கட்டிடங்கள், நவீன டிசைன்களுடன் கூடிய நுழைவு வாயில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் தகவல் பலகைகள், பயணிகள் ஓய்வெடுக்க மூன்று ஓய்வு அறைகள், குறிப்பாக ஓய்வறையில் ஏசி வசதி, கூடுதல் வாகனம் நிறுத்தும் வசதி, லிப்ட் மற்றும் எக்ஸ்குலேட்டர் வசதிகள் செய்து தரப்பட உள்ளன. அதேபோன்று நவீனமயமாக்கப்பட்ட, வானிலை பாதிக்காத நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன. நடைமேடைகளில் பயணிகள் அமர்வதற்கான கூடுதல் இருக்கைகளும் வசதி செய்யப்படவுள்ளன.
செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
செங்கல்பட்டு ரயில் நிலையம் மறு சீரமைக்கும் பணி 70% தற்போது நிறைவடைந்துள்ளது. ஒரு சில குறிப்பிட்ட பணிகள் 80 சதவீதத்திற்கும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து, புதிய தோற்றம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுசீரமைப்புகள் பணிகள் முடிவடைந்த பிறகு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் வரை கையாளக்கூடிய திறன் பெற்ற, ரயில் நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.