முதலாளி-தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் தனக்கு கிடைத்த தமிழக அரசின் விருது பணத்தில் தன்னிடம் வேலை செய்யும் கூலி சிற்ப தொழிலாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுத்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய சிற்பக்கலைஞர்.


சிற்ப நகரம் மாமல்லபுரம்


செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மாமல்லபுரம் நகரம், கற்சிற்பக்கலைஞக்கு பெயர் பெற்ற நகரமாகும். இங்குள்ள 1000 சிற்பக்கலை கூடங்களில் 2000-க்கும் மேற்பட்ட  மேற்பட்ட சிற்பக்கலைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு வடிவமைக்கப்படும் கற்சிற்பங்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இங்குள்ள ஐந்துரதம் அருகில் கற்சிற்கலை கூடம் வைத்திருக்கும்  யானை வரதன் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக கற்சிற்பங்கள் வடித்து விற்பனை செய்து வருகிறார். 




ரூ.50 ஆயிரம் ரொக்கம்


குறிப்பாக மாமல்லபுரத்தில் யானை சிற்பங்கள் வடிப்பதில் கைதேர்ந்த சிற்பக்கலைஞரான இவர் இதுவரை 5 அடி உயரம் முதல் 10 அடி வரை உயரமுள்ள பிரம்மாண்டமான 800  யானை சிற்பங்களை கல்லில் வடித்து சாதனை படைத்துள்ளார். அதிக யானை சிலை வடிவமைத்தல் மற்றும் அவர் வடித்த தமிழன்னை சிலை சிறந்த சிற்பமாக தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் சிறந்த சிற்ப கலைஞராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு, ரூ.50 ஆயிரம் ரொக்கம், தங்க நாணயங்கள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து தனக்கு கிடைத்த பரிசு தொகையை  தன் தேவைக்கு  பயன்படுத்தாமல், தன்னிடம் வேலை செய்யும் சிற்ப கூலி தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு செய்தார். 


பாகுபாடு இல்லாமல் தன் மனிதயேத்தை வெளிப்படுத்தினார்.


அதன்படி, பரிசு தொகையில் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நல்ல சிந்தனையில்  சிற்ப கூலி தொழிலாளர்களுக்கு  வீட்டு உபயோக பொருளான மிக்ஸி வாங்கி கொடுத்து, முதலாளி-தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் தன் மனிதயேத்தை வெளிப்படுத்தினார்.




தனக்கு கிடைத்த பரிசு பணத்தில் தங்களுக்கு தொழில் கற்று கொடுத்த முதலாளி (மூத்த சிற்பக்கலைஞர் யானை வரதன்) வீட்டு உபயோக பொருளான மிக்ஸி வாங்கி கொடுத்த மனித நேயத்தை நினைத்து நெகிழ்ச்சி அடைந்து, மனமகிழ்வோடு அதனை வாங்கி சென்றதை காண முடிந்தது.




இதுகுறித்து சிற்பி யானை வரதன் கூறுகையில், நம்மிடம் வேலை செய்யும் அனைத்து சிற்பிகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை பார்ப்பதாக தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் பரிசு தொகையிலிருந்து தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், தானும் மகிழ்ச்சியாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் யானை வரதன்.