சமையல் எரிவாயு


நவீன உலகில் சமையல் எரிவாயு பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் நகர்ப்புறத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சமையல் எரிவாயு  சிலிண்டர்கள்  படிப்படியே  அனைத்து பகுதிகளுக்கும் பரவி,  இன்று   கிராமங்களில் கூட சமையல் எரிவாயு தான்,  உணவு சமைப்பதற்கு மிக முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது.  சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதில் பல்வேறு,  பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்பொழுது அதை மீறுகின்ற பட்சத்தில் பெரும் விபத்துக்கள் ஏற்படுத்தி உயிர் சேதங்களை விளைவித்து வருகிறது. இது தொடர்பாக  அரசு சார்பில் பல்வேறு  விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், விபத்துக்கள்  கவனக்குறைவால் ஏற்படும், விபத்துகளில் பல உயிர் சேதங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் செங்கல்பட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற, விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




 செங்கல்பட்டு  கேஸ் விபத்து


செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட  பெரிய மணியக்காரர் தெருவில்,  பீகார் மாநிலத்தை சேர்ந்த சதாம்  (29 ). கடந்த ஏழு வருடங்களாக வசித்து வருகிறார்.  இவர் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில்,  உணவு  கேண்டினில்  தேனீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர்  தனது மனைவி ரோஜி குத்தூன் (24), மகள் ரஜியா பர்வீன் (8), சாய்பலி (5), அப்தாப் (2) என்ற 2 மகன்கள் என குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் சதாம் வேலைக்கு சென்றுவிட்டார்.


 




இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த அவரது மனைவி ரோஜி குத்தூன் குழந்தைகளுக்கு இரவு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சமையல் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதில் வீடு முழுவதும் தீப்பிடித்தது. இதில் தாய் ரோஜி குத்தூன் மற்றும் 3 குழந்தைகளும் 80 சதவீத பலத்த தீக்காயங்களுடன், உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.


சிகிச்சை பலனின்றி மூவர் பலி


அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு   மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தாய் ரோஜி குத்தூன், மூத்த மகள் ரஜியா பர்வீன் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மகன்களான சாய்பலி, அப்தாப் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




 


இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 80 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த 8 வயது மகள் ரஜியா பர்வீன்  நேற்று  காலை பரிதாபமாக  சிகிச்சை பதிவின்றி உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 2 வயது மகன் அப்தாப்  மற்றும் சாய்பலி  ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக  உயர்ந்தது.  இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


 விபத்து நடைபெற்றது எப்படி ?


சமையல் தொடங்குவதற்கு முன்பாக  சில மணி நேரம் வீடு பூட்டி இருந்துள்ளது. சமையல் அறையில் இருந்த ஜன்னல்களும் மூடியே இருந்துள்ளது.  அப்பொழுது கேஸ் கசிவு ஏற்பட்டு இருப்பதை தெரியாமல் ரோஜி குத்தூன்,  அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது மட்டுமில்லாமல்,   ஜன்னல் கண்ணாடிகளும்  பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது. இதுதான் தீ விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.




 தற்காலிக கேஸ் அடுப்பு  பயன்படுத்தியது  காரணமா ?


அதாவது திறந்தவெளியில், அதிக நபர்களுக்கு உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் அடுப்பை உபயோகித்து உள்ளனர்.  வீட்டில் பயன்படுத்தக்கூடிய அடுப்பை பயன்படுத்தி இருந்தால், கேஸ் கசிவு இருந்தாலும், இது போன்ற அதிக அளவு கசிவு இருக்காது என தெரிவிக்கின்றனர். இது போன்ற அடுப்புகள் திறந்தவெளியில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வீட்டில் பயன்படுத்துவதற்கு, இது போன்ற அடுப்புகள் உகந்தது இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கேஸ் சிலிண்டர் விவகாரத்தில் அரசு சொல்லக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது.