கரூர் அருகே கேபிள் ஆபரேட்டரிடம் பழி வாங்கும் நடவடிகையில் தொழிலை நடத்த முடியாமல் செய்யும் மின்சார வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் ஆப்ரேட்டர் மனு அளித்தார்.


 




கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த சேர்வைகாரன்பட்டியை சார்ந்தவர் டேனியல் பிரசாந்த். இடையபட்டி, சுக்காம்பட்டி, ஆலந்தூர் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டராக கடந்த 13 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் பாலவிடுதி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் அதிகளவில் பயன்படுத்தியதற்காக வைப்பு தொகை கட்டச் சொல்லியுள்ளனர். அவர் கடை உரிமையாளரிடம் சென்று மின்சார வாரி அலுவலகத்தில் வைப்புத் தொகை கட்டச் சொன்னதை கூறியுள்ளார்.


 




மின்சார வைப்புத் தொகை கட்டுவதாக பாலவிடுதி துணை மின் நிலையம் சென்ற போது அங்கு பணிபுரியும் ஆனந்த் என்பவர் வாடகைதாரர் தான் கட்ட வேண்டும் என வலுக்கட்டாயமாக கட்ட வைத்துள்ளார். தற்போது, கேபிள் டிவி ஆப்ரேட்டர் தனது அலுவலகத்தை காலி செய்த நிலையில் மின்சார வாரிய அலுவலகத்தில் கட்டிய வைப்புத் தொகையை திருப்பிக் கேட்டால் ஆனந்த் தர மறுப்பதாகவும், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் கேபிள் ஆப்ரேட்டர் வசிக்கும் வீடு மற்றும் சுற்றியுள்ள இடங்களில் மின்சாரத்தை நிறுத்தி வைப்பதாகவும் குற்றம் சாட்டி இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.


 




அப்போது பேசிய கேபிள் ஆப்ரேட்டர் டேனியல், துணை மின் நிலையத்தில் பணியாற்றும் ஆனந்த் என்பவர் மின்கம்பத்தில் கேபிள் வயர் கட்டி எடுத்துச் செல்ல தனக்கும், உதவி செயற் பொறியாளருக்கும் பணம் தர வேண்டும் என்று கேட்டதாகவும், தர மறுத்ததால் தொடர்ந்து ஆனந்த் தன்னை பழி வாங்குவதாக குற்றம் சாட்டினார்.