ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் உலுக்கியுள்ளது. குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பலமுறை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. குருத்வாராவுக்கு உள்ளே 16 பக்தர்கள் இருந்துள்ளனர். ஆனால், எத்தனை பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறித்து தெரியவில்லை.






 


காபூல் கர்தே பர்வான் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் உயிரிழப்பு அதிகமாக இருக்குமோ என அச்சம் கொள்ளப்படுகிறது.


இதுகுறித்து உள்ளூர் செய்தி நிறுவனமான டோலோ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "காபூல் நகரின் கார்டே பர்வான் பகுதியில் வெடி சத்தம் கேட்டது. இந்த சம்பவத்தின் தன்மை பற்றியும் உயிர் சேதம் குறித்தும் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. காபூலின் 10வது மாவட்டத்தில் உள்ள பட்காக் சதுக்கத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இது குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு வந்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 






 


குண்டுவெடிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "காபூலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து வெளியாகும் செய்திகள் எங்களை கவலை அடைய செய்துள்ளது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும் வெளிவரும் சம்பவங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.


இதேபோல, ஜூன் 11 அன்று, காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து காபூல் பாதுகாப்புத்துறை சார்பில், "முன்னதாக, திங்கள்கிழமை, காபூலின் காவல் மாவட்டம் 4 இல் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்களின் மூலம் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.