சிவத்தலங்கள் பலவற்றிலும் மேம்பாடுற்று,இந்திரன் முதலிய தேவர்களும் அகத்தியர் முதலிய முனிவர்களும் ஒன்பது கோள்களும் முகுந்தன் முதலிய பெரு மன்னர்களும் சோம கருமன் ஆலய கருப்பன் முதலிய அடியவர்களும் பிரம்ம தீர்த்தம் முதலிய நீர் பொய்கைகளையும் நிறைந்து இருக்கும் வில்வராணி என்று அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் ஆலய சித்திரை பெருந்திருவிழா மார்ச் 28ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து  மார்ச் 30ஆம் தேதி துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினமும் விக்னேஸ்வரர் சுப்பிரமணியர் சமயகுரவர்கள் பஞ்சமூர்த்தி போன்றவர்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிய வீதி உலா தொடர்ந்து நடைபெற்றது.




அதைத் தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி அஷ்டதிக்கு துவஜாரோகணம் எனப்படும் எண்திசை கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த திருத்தேரில் தியாகராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த தேரோட்ட வடம் பிடிக்கும் நிகழ்வானது 7.15 மணிக்கு ரிஷப லக்னத்தில் நடைபெற்றது. இதில் செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை நிறுவனரும் தொழிலதிபருமான திவாகரன் மற்றும் ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். 




இந்த திருத்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேரோட்டத்தில் திருவாரூர் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் பெருமளவில் கலந்து கொண்டதால் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் தற்காலிக கழிவறை வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டிருந்தன.


தேரோட்டம் இன்று காலை தொடங்கியதில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வந்தது குறிப்பாக திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தேரோட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய பக்தர்களுக்கு குடிநீர் கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுகாதாரத்துறை சார்பில் ஐந்து மருத்துவ குழுக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி அளிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக இந்த தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்பொழுது மிக உற்சாகத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.