வங்கதேசத்தின் அரசியல் சூழல் என்பது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில், வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு மத்தியில் இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.


வங்கதேச பொதுத் தேர்தல்:


வாக்குப்பதிவை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால், வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார் ஷேக் ஹசீனா. கோபால்கஞ்ச்-3 தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோபால்கஞ்ச்-3 தொகுதியில் எட்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.


தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. முழுமையான முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, 40 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாலும், இறுதி எண்ணிக்கைக்குப் பிறகு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மாறலாம். கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.


இந்தமுறை, பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, ஒரு நடுநிலையான இடைக்கால அரசை நிறுவிய பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இந்த கோரிக்கையை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு நிராகரித்தது. இதனை கண்டித்து முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.


வன்முறைக்கு இடையே நடந்த தேர்தல்: 


அதோடு, இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி கலீதா வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவரின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  


சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த 5 பள்ளிகளுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர்.  அதோடு, இந்திய எல்லையான பெனாபோலில் இருந்து சென்ற பெனாபோல் விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். 


இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகள் காரணமா? அல்லது எதிர்க்கட்சியின் வன்முறையால் ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள தீயணைப்பு சேவை புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 16 மணி நேரத்தில் 14-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதனால் வங்கதேசத்தின் முக்கிய நகரங்கள் கலவர பூமியாக காட்சியளிக்கின்றன.


இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்து இருப்பது வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்கள் அன்றைய தினம் முதல் தாங்கள் வாக்களிக்கும் மையங்களைக் கண்டறிவது உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிய வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய Tk21 கோடி செயலி செயலிழந்தது.