இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்புக்களை செய்து கொடுக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான வசதிகளையும், அவருக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கும், இலங்கையில் அவரது பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவே அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் எதிர்வரும் 24ஆம் தேதி கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என அவரது நெருங்கிய உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.
எனினும், கோத்தாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை கோத்தாபய ராஜபக்சவின் கொழும்பு மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டிற்கும் பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்சவின் வீடு இருக்கும் பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதிகளவான ராணுவத்தினருக்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புலனாய்வு அதிகாரிகள் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய கோத்தபாயவின் வீடு இருக்கும் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சூழவுள்ள பகுதிகளில் மட்டும் விசேஷ கண்காணிப்பில் ஈடுபடுமாறும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ச வரும் 24ஆம் தேதி இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அவரது வருகை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச குடும்பத்தினர் தரப்பிலோ அல்லது இலங்கை அரசு தரப்பில் இருந்தோ உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அதேவேளை அவர் செப்டம்பர் மாதம் தான் இலங்கை வருவார் என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் திடீரென கோத்தபாய ராஜபக்சவின் வீடு இருக்கும் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அவர் 24 தேதி வருவார் என தகவல் வெளியானதை அடுத்து கோத்தபாயவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படலாமோ, அல்லது வீடுகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் பேரில் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ஒரு சாரார் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வருகை தொடர்பில் அவரது செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது , இன்னும் சில தினங்களில் கோத்தாபய இலங்கை வரவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதனை முன்னாள் அதிபர் கோத்தபாய தனக்கு தெரியப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச வரும் 24ஆம் தேதி இலங்கைக்கு வர உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடப்பட்டது.
தாய்லாந்தில் உள்ள கோத்தபாய ராஜபக்ச மனைவியின் அமெரிக்க குடியுரிமையை வைத்து அங்கு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். ஆனாலும் அதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
அமெரிக்கா வீசா அவருக்கு கிடைப்பதில் இழுபறி நீடிப்பதாகவே கூறப்படுகிறது, இந்நிலையில் கோத்தாபய மீண்டும் இலங்கைக்கு வருவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவே அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.