ஓய்வுபெற்ற அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் விசாரணை 80% நிறைவு பெற்று விட்டதாகவும், சூரப்பாவிடம் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் நீதிபதி கலையரசன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க நீதிபதி கலையரசன் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவித்தது. மேலும்,  விசாரணை ஆணையத்தின் பணிக்காலத்தை மே மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.   

  


கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் சூரப்பாவை தமிழக ஆளுநர்  நியமித்தார். அவரது பதவிக்காலம் கடந்த 11-ஆம் தேதியோடு முடிவடைந்ததை அடுத்து ஓய்வு பெற்றார். இதற்கிடையே, துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் கூட்ட அமைப்பாளர் (கன்வீனர்) குழு இன்னும் கூட்டப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது, துணை வேந்தராக உள்ள ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு சிண்டிகேட் குழுவை கூட்டி இதுகுறித்த நடவடிக்கையை மேற் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை, சூரப்பா எந்த முயற்சியும்  மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 


இதற்கிடையே, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னதாக நியமித்தார். இந்த தேடுதல் குழுவில் எஸ்.பி.தியாகராஜன், ஷீலா ராணி சுங்கத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். குழுவில் ஆளுநரின் பிரதிநிதியாக டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஸ் குமார் நியமிக்கப்பட்டார்.   


புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான பணிகளை குழுவினர் தொடங்கி உள்ள நிலையில், சூரப்பா தொடர்ந்து தற்காலிகமாக பணியாற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை முகாந்திரமோ, ஆதாரமோ இல்லை என்றும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அறிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.