மானிய விலையில் இடு பொருட்கள் வழங்க ரூ.300 லஞ்சம் கேட்பதாக வேளாண் அலுவலர்கள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

 

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது வரை 89 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 28 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பிலும் 61 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு பணியிலும் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு இடுபொருட்களை முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

 

குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இரண்டு ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தேவையான இடுபொருட்களை வழங்க தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.  இதில் இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு இரண்டு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ், உள்ளிட்டவை முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது, இதற்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 47 ஆயிரத்து 700 விவசாயிகள் இந்த  திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதில் 30 ஆயிரம் விவசாயிகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் முழு மானியத்தில் இடுபொருள் பெறுவதற்கு ரூ 300 லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகளிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், குறுவை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இரண்டு ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் இரண்டு மூட்டை  உரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சிட்டா மற்றும் அடங்கல் சான்று பெற்றுக் கொடுத்தாலும் அதனை உடனடியாக பதிவு செய்துகொண்டு இடுபொருட்களை வழங்காமல், வேளாண் அலுவலர்கள் விவசாயிகளிடம் சாக்குபோக்கு கூறி வருகின்றனர். மாறாக ரூ 300 லஞ்சம் கொடுக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவாக பதிவு செய்து இடுபொருட்களை வழங்குகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்றைய தினம் கூத்தாநல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு காத்துக்கிடந்ததோடு லஞ்சம் கேட்கும் வேளாண் அலுவலர்கள் குறித்து குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.



இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவக்குமாரிடம் கேட்டபோது, தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரம் உள்ளிட்ட இடு பொருள்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது, அதனை நாங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தி வருகிறோம். ஒரு சில இடங்களில் விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு இடுபொருட்கள் வழங்குவதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. அதுபோன்று வேளாண் அலுவலர்கள் லஞ்சம் கேட்பது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.