நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிகவும் தீவிரம் அடைந்தது. அந்த பரவல் தற்போது ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் தடுப்பூசி தொடர்பான தவறான புரிதல் காரணமாக முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாற தொடங்கி பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வருகின்றனர்.


சினிமா, விளையாட்டு பிரபலங்களும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், சூர்யா – ஜோதிகா தம்பதி தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். 


சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ”Vaccinated” என குறிப்பிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, ரஜினிகாந்த், நயந்தாரா, மாளவிகா மோகனன் என முன்னணி நட்சத்திரங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு அதை பொது மக்களுக்கு அறிவித்து வருகின்றனர்.






மேலும், நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் நடைமுறை அமலாகவுள்ள நிலையில், இதற்கு Cowin App முன்பதிவு செய்ய கட்டாயமில்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 7,424 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பு 7817 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 7500க்கும் குறைவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24,29,924 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,29,164 ஆக உயர்ந்துள்ளது.


தடுப்பூசி குறித்து மட்டுமல்லாது, நீட் தகுதித் தேர்வு குறித்து ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு நிறுவியுள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு அகரம் சார்பாக நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்துப் பதிவு செய்யப்படும் என நடிகர் சூர்யா கடந்த வாரம் அறிவித்திருந்தார். மேலும் அரசு விளம்பரப்படுத்தியுள்ள neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ஆம் தேதிக்குள் மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 






இதுகுறித்த அவரது அறிக்கையில், 'அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு 'கல்வியே ஆயுதம்'. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க 'ஒரே தேர்வு முறை' என்பது சமூக நீதிக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.