பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தற்போது வேகமெடுத்துள்ளது. அந்த வழக்கில் தன்னை கைது செய்த அதிகாரிகளை கொலைச் செய்ய நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அது தொடர்பான சில ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். இதையடுத்து நடிகர் திலீப் உள்பட ஆறுபேர் மீது அதிகாரிகளை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சதித்திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப், அவரின் தம்பி அனூப், தங்கையின் கணவர் சுராஜ், உறவினர் அப்பு, திலீபின் நண்பர் பைஜூ செங்ஙமனாடு, ஆலுவாயைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சரத் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்க உதவி செய்த சாய் சங்கர் உள்ளிட்டோரிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திலீப் உள்ளிட்டவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில் இந்த வழக்கில் திலீபின் மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

 



 

இந்த நிலையில், போலீசார் திட்டமிட்டு தனக்கு எதிராக சதி செய்கின்றனர். எனவே தன்மீது பதியப்பட்ட வழக்கை ரத்துச்செய்ய வேண்டும். இது போலீசுக்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் போலீஸ் மூலம் விசாரணை நடத்தக்கூடாது. சி.பி.ஐ போன்ற வேறு ஏஜென்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தனி பெஞ்ச் நீதிபதி சியாத் ரஹ்மான், இந்த வழக்கை ரத்துச்செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உத்தர்அவு பிறப்பித்தார். மேலும், விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதற்கு முக்கியமான ஆதாரங்கள் இருப்பதாகவும். வழக்கை சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகளுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தடை இல்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



 

இது ஒருபுறம் இருக்க, நடிகை பாலியல் வழக்கை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. காவ்யா மாதவன் போன்றவர்களை விசாரிக்க பேண்டியது இருப்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மே மாதம் 30-ம் தேதிக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என ஒன்றரை மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது ஐகோர்ட். தனக்கு எதிரான வழக்கு தீவிரம் அடைந்துள்ளதால் கலக்கத்தில் உள்ளார் நடிகர் திலீப்.