Video : சிறையில் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ்.. வெளியான பரபரப்பு வீடியோ.. நடந்தது என்ன?
ஹவாலா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (Satyendar Jain), டெல்லி சிறைச்சாலையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதை போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஹவாலா முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில், சுகாதார அமைச்சராக இருக்கும் சத்யேந்தர் ஜெயினிடம் கடந்த 2018-ம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கினர். பின்பு விசாரணை தீவிரபடுத்தப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் மசாஜ் செய்துகொண்ட அமைச்சர்:
Just In




ஜாமீன் கோரி கடந்த ஜுன் மாதம் சத்யேந்திர் ஜெயின் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து இரண்டாவது முறையாக ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவும், அண்மையில் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே, டெல்லி திகார் சிறையில், அமைச்சர் சத்யேந்திர் ஜெயினுக்கு விவிஐபி சலுகைகள் வழங்கப்பட்டாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு உதவியாளர் ஒருவர் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றதாக வெளியாகியுள்ள வீடியோவில், சத்யேந்தர் ஜெயின் படுக்கையில் படுத்து இருக்க, நாற்காலியில் அமர்ந்து இருக்கும் ஒருவர் அமைச்சரின் கை, கால்களை பிடித்துவிட்டுள்ளார்.
செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்றதை போன்று வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில், படுக்கையில் படுத்து இருக்கும் அமைச்சருக்கு உதவியாளர் உடல் முழுவதும் மசாஜ் செய்துவிடுவதோடு, தலையில் ஆயில் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பாஜக குற்றச்சாட்டு:
ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு 5 மாதங்களாக ஜாமின் கூட கிடைக்காமல் இருக்கும், சத்யேந்தர் ஜெயினுக்கு ஆம் ஆத்மி அரசு சிறையிலேயே சொகுசு வாழ்க்கையை ஏற்படுத்தி தந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. குற்றவாளிகளுக்கு விவிஐபி சலுகைகள் வழங்குவதன் மூலல், ஆம் அத்மி அரசால் டெல்லி அரசு அதிகாரிகள் அவமானப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
சத்யேந்தர் தரப்பு விளக்கம்:
அதேநேரம் சிறைச்சாலை வழிமுறைகளை பின்பற்றியே சத்யேந்தர் ஜெயின் சலுகைகளை பெற்றுள்ளதாகவும், அதில் எவ்வித விதிமீறல்களும் இல்லை எனவும், சந்யேந்தரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.