தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக மற்றும் திமுகவில் உள்ள தலைவர்கள்  வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்தின்போது, எதிர்க்கட்சியினரை தாக்கி பேசும்போது சில அரசியல் கட்சி பிரச்சாரகர்களும், வேட்பாளர்களும் காரசாரமாகவும், கண்ணியக் குறைவாகவும் பேசிவிடுகின்றனர். அது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது.


சமீபத்தில், திமுக எம்பி ஆ.ராசா, திமுக தலைவர் ஸ்டாலினையும், முதல்வர் பழனிசாமியையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதல்வர் குறித்து அவதூறாக விமர்சித்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன் புகார் அளித்துள்ளார்.


தேர்தல் விதிமீறல் புகார் அடிப்படையில் ஆ.ராசா மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், தரக்குறைவாக பேசி வருவதால் ஆ.ராசா இனிமேல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.