டெலிவரி ஊழியர்கள் போல் வந்த கொலையாளிகள்:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் தெருவில் வசித்து வந்த இவர் நேற்று இரவு (ஜூலை 5 ) தனது வீட்டு வேலை நடந்துக் கொண்டிருக்கும் இடத்தில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் பதிவாகி வெளியாகியுள்ளது. அதில் டெலிவரி ஊழியர்கள் போல் வந்த கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி விட்டு 3 இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. கட்சியில் மாநிலத்தலைவர் பொறுப்பில் உள்ள ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவரது கொலைக்கு அக்கட்சியின் தலைவர்கள் தொண்டர்கள் முதல் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்:
மேலும் இக்கொலை தொடர்பாக பெரம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 8 பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். குறிப்பாக இக்கொலையில் தொடர்புடையதாக கூறி பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா, அவரது நண்பர்கள் என கூறப்படும் ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேரும் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக கைதான புன்னை பாலா தனது அண்ணன் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆற்காடு சுரேஷ் டு ஆம்ஸ்ட்ராங்க் கொலையின் பிண்ணனி:
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரான தென்னரசு என்பவரை அவரது குடும்பத்தினர் கண்முன்னே ஆற்காடு சுரேஷின் தரப்பு கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அதற்கு பழி தீர்க்க கடந்த 2023 ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு காரணமான கொலையாளிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் பல உதவிகளை செய்து வந்ததாகவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் கருதி வந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கொலையின் போது அவருடன் இருந்த மாது என்கிற பாக்ஸர் மாதவன் காயங்களுடன் தப்பிய நிலையில் அவரையும் கடந்த ஜனவரியில் ஒரு கும்பல் கொலை செய்துள்ளது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் இந்த கொலைகளுக்கு பக்கபலமாக இருந்தது ஆம்ஸ்ட்ராங்க் என கருதி எப்படியாவது அவரை கொலை செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்துள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று திட்டமிட்டப்படி அவரை தீர்த்துக்கட்டி உள்ளனர்.
அண்ணனின் பிறந்தநாளுக்கு நினைவுநாள் பரிசு:
பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்க் எப்பொழுதும் தனது ஆதரவாளர்களுடன் தான் இருப்பார். இந்த நிலையில் அவரை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும், அதுவும் ஆற்காடு சுரேஷின் நினைவு நாளுக்குள் கொலை செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்த கொலையாளிகள் நேற்றைய சம்பவத்தை பயன்படுத்தி அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அதோடு நேற்றைய தினம் ஆற்காடு சுரேஷின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினமே நினைத்தது போல் சம்பவத்தை முடித்துவிட்டோம் என்று ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையின் அலட்சியத்தால் பழிப்போன உயிர்??
நேற்று படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் ஒரு முறை, இரண்டு முறை அல்ல மூன்று முறை எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் காவல்துறை அலட்சியமாக இருந்ததாலே ஆம்ஸ்ட்ராங் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அக்கும்பல் திட்டமிட்டது போல அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.