பூமிப்பந்தையே கொரோனா அச்சுறுத்திவரும் இந்த இக்கட்டான சூழலில் உலக நாடுகளின் பார்வை தற்போது மியான்மரின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளை எல்லைகளாக கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுதான் மியான்மார். கடந்த பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை கவிழ்த்து ராணுஆட்சி அங்கு அதிகாரத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்திவருகின்றனர்.


மியான்மார் ராணுவமும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தி தனது கோரமுகத்தை காட்டிவருகின்றது. 


ஆயுதப்படை தினம் :


தனது ஆயுதப்படை தினத்தை நேற்றுமுன்தினம் கொண்டாடியது மியான்மார் ராணுவம். அப்போது அரசு தொலைக்காட்சியில் பேசிய ராணுவ தளபதி மின் ஆங் ஹேலிங் "தங்களுடைய ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் தலையில் சுடப்படுவார்கள்" என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் தளபதியின் அந்த மிரட்டலையும் மீறி மியான்மரின் யாங்கூன் மற்றும் மாண்டலே ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.  




கலவரகமாக மாறிய அமைதிப்போராட்டம் :


ஆரம்பத்தில் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் தீவிரமடைய தொடங்கியது. இதனை தொடர்ந்து யாங்கூன் மற்றும் மாண்டலேவின் பல பகுதிகளில் தீவைப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறியது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை அடக்க மியான்மர் ராணுவம் கண்முடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. 




இந்த இரக்கமற்ற துப்பாக்கிச்சூட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 114 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். மியான்மார் ராணுவத்தின் இந்த செயலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடென் உள்ளிட்ட பல நாட்டுத்தலைவர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.