அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேரை பணியில் சேர்க்க வேண்டும்  என பல்வேறு அரசுதுறை மற்றும் அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டு உள்ளது.


பல்வேறு அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள மேம்பாட்டுத்துறை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.


அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பல்வேறு அரசுதுறைகளில் காலி பணியிடங்கள் இருப்பதாக தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.


இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை ஆய்வு செய்து, அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை அரசு துறைகளில் ஆட்சேர்க்கும் படி அறிவுறுத்தினார்" என பதிவிடப்பட்டுள்ளது.