இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பதாய் ஹோ' படத்தின் ரீமேக் தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருக்கும் வீட்ல விஷேசம்.
வயதான அம்மா அப்பாவாக சத்யராஜ் - ஊர்வசி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். அதில் ஒருவர்தான் ஆர்.ஜே.பாலாஜி. சத்யராஜின் அம்மாவாக பழம் பெரும் நடிகை கேபிஏசி லலிதா நடித்திருக்கிறார். ஒரு மிடில் க்ளாஸூக்கான லைஃபை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக்குடும்பத்தில் பூகம்பமாக வந்து விழுகிறது ஊர்வசி கர்ப்பமான செய்தி. அதை அந்தக்குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது. இந்த விவகாரத்தில் ஊர்வசி எடுத்த முடிவு என்ன..? என்பதுதான் படத்தின் கதை.
சத்யராஜ் - ஊர்வசி ஜோடியின் எமோஷன்தான் படத்தின் முதுகெலும்பு. லூட்டிகள், சேட்டைகள் என நகரும் முன்பாதி ஊர்வசி கர்ப்பமானதிற்கு பிறகு சீரியஸ் மோடிற்குள் செல்கிறது. ஆனால் அதிலும் சில இடங்களை காமெடியாகவே கையாண்டிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சத்யாராஜ் ஊர்வசி கர்ப்பமான செய்தியை குடும்பத்தில் சொல்ல திணறும் காட்சிகள் திரையரங்கை சிரிப்பால் அதிரவைக்கிறது. அம்மாவாக அன்பை பொழிவதாகட்டும், இல்லத்தரசியாக அவர் காட்டும் பொறுப்பாகட்டும், தனது முடிவில் அவர் காட்டிய பெண்ணியமாகட்டும் எல்லா இடங்களில் அக்மார்க் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஊர்வசி.
அண்மை காலமாக நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஊர்வசிக்கு, சரியான தீனியாக வந்திருக்கிறது இந்தப்படம். கிண்டலும் நக்கலுமாக பழைய படங்களில் பார்த்த சத்யாரஜை இந்தப்படத்தில் பார்க்கலாம்.
இராண்டாம் பாதி முழுக்க எமோஷன்தான். பல இடங்களில் நடிகர் என்பதை தாண்டி, ஒரு இயக்குநராக வசனங்களுக்காக கைத்தட்டல் வாங்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி சூரரைப்போற்றுக்கு பிறகு அபர்ணா பாலமுரளிக்கு நல்ல கதாபாத்திரம். நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பழம் பெரும் நடிகை கேபிஏசி லலிதா ஆரம்பத்தில் இருந்து கடுகடுவென விழுந்தாலும், ஊர்வசிக்காக பேசும் ஒரு காட்சியில் மொத்த திரையரங்கை தன்பக்கம் திருப்பிவிடுகிறார். ஷிவானி சினிமாவில் தனது வாய்ப்பை தவறாக பயன்படுத்தி வருகிறார் என்று தோன்றுகிறது. இது அவர் படத்தில் வந்து போகும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் இருந்தே தெரிகிறது.
பாடல்கள் எதுவும் பெரிதும் மனதில் பெரிதாக நிற்கவில்லை.. க்ளைமேக்ஸ் காட்சியில் நர்ஸூக்கும், ஊர்வசி சத்யராஜ் ஜோடிக்கும் இடையே நடக்கும் மதப்போட்டி தேவையில்லாத ஒன்று. மற்றபடி ஒரு நல்ல பேமிலி எண்டர் டெய்னராகவே வந்திருக்கிறது வீட்ல விஷேசம்.