தென்னிந்திய நடிகை சாய் பல்லவி சமீபத்தில் காஷ்மீர் பண்டிட்கள் குறித்தும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கும்பல் படுகொலைகள் குறித்தும் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதற்கு எதிராக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஹைதராபாத்தின் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் தனி நபர் ஒருவர் நடிகை சாய் பல்லவி பேசியதால் மனம் புண்பட்டிருப்பதாகக் கூறி புகார் அளித்துள்ளார். எனினும், காவல்துறை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. மேலும், சட்ட ஆலோசனை கோரி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 


சமீபத்தில் தெலுங்கு செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சாய் பல்லவி, `சமீபத்தில் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் குறித்து காட்டியிருந்தது. மத மோதல்களைக் கதைக்களமாகக் கொண்டால் சமீபத்தில் பசு மாடுகளைக் கொண்ட வாகனத்தை ஓட்டியதற்காக முஸ்லிம் ஒருவர் தாக்கப்பட்டார். அப்போது அவரைச் சுற்றியிருந்தோர் ஜெய் ஸ்ரீராம் என முழங்கினர். கடந்த காலத்தில் நடந்ததற்கும், தற்போது நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 







நடிகை சாய் பல்லவியின் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை சாய் பல்லவியைக் கடுமையாக இழிவுபடுத்தும் விதமாக எழுந்துள்ள கமெண்ட்களைக் கண்டித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







நடிகை சாய் பல்லவி தற்போது `விரத பர்வம்’ என்ற திரைப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ராணா டகுபதி முன்னணி வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவியும், நடிகர் ராணா டகுபதியும் நக்சல் அமைப்புத் தலைவர்களாக நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.