The Warrior Review: கிட்டத்தட்ட 3 வருட இடைவேளைக்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம்  ‘தி வாரியர்’. தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.   


கதையின்கரு 


மதுரையில் பிரபல ரெளடியாக வலம் வரும் குருவின் ( ஆதி) ஆட்கள், நடுரோட்டில் வைத்து ஒருவரை வெட்டிச் சென்று விட, அவரை டாக்டரான சத்யா (  ராம் பொத்தினேனி) மருத்துமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுகிறார். இதை தெரிந்து கொண்ட குருவின் ஆட்கள் மருத்துவனைக்குள் வைத்தே வெட்டப்பட்டவரை கொன்று விட, ஆதங்கத்தின் உச்சிக்கு செல்லும் சத்யா, காவல்துறையின் உதவியை நாடுகிறார். அங்கும் அவருக்கு தோல்வியே பரிசாக கிடைக்க, டாக்டர் தொழிலை கைவிட்டுவிட்டு, காக்கிச்சட்டையை அணிகிறார். இறுதியில் போலீஸ் அதிகாரியாக அவர் எடுத்துக்கொண்ட நோக்கம் நிறைவேறியதா, குருவின் கொட்டத்தை அவர் எப்படி அடக்கினார், இடையில் நுழையும் விசில் மஹாலட்சுமியின் (கீர்த்தி ஷெட்டி) காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை. 




தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்ற 15 வருட கனவு இந்தப்படம் மூலமாக  ராம் பொத்தினேனிக்கு நிறைவேறி இருக்கிறது. ஆனால் நிச்சயம் அவரது கனவுக்கு தகுந்த படம் இது அல்ல. முதல் பாதியில் சாஃப்ட்டான டாக்டராக வரும் ராமுக்கு, இராண்டாம் பாதியில் போலீஸ் வேடம். இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம். அவர் கொடுக்கும் சில ரியாக்‌ஷன்கள் ரசிக்க வைப்பதற்கு பதிலாக, நம்மை நெழிய வைக்கின்றன. 




கீர்த்தி ஷெட்டியின் காதலும், குயிட்னஸூம் கொஞ்சம் ஆறுதல். படத்திற்கு சப்போர்ட்டாக நிற்பது தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புல்லட் சாங், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. ராம், கீர்த்தி ஷெட்டியின் கெமிஸ்ட்ரியும், டான்ஸூம் துள்ளல். பின்னணி இசை ஓகே ரகம். 




படத்தின் மிகப் பெரிய பலவீனம் லிங்குசாமியும் அவரது திரைக்கதையும். 3 வருட போராட்டத்திற்கு பிறகு வெளியாகும் திரைப்படம். நிச்சயம் கம் பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்து திரையரங்கினுள் நுழைந்தால், நான் இன்னும் மாறவில்லை அப்படியேத்தான் இருக்கிறேன் என்று பெருத்த ஏமாற்றத்தை தந்து இருக்கிறார்.




ஆரம்பக்காட்சியே  படத்தின் ஒட்டுமொத்த பலவீனத்தை வெளிப்படுத்திவிட்டது. லிங்குசாமியின் படங்களின் ஆகப் பெரும் பலம் ஆக்‌ஷனும் எமோஷனும். ஆனால் இரண்டுமே இதில் இல்லை. சரி வசனங்களிலாவது கவனம் ஈர்ப்பார் என்று பார்த்தால், மாஸ் வசனங்கள் என்ற பெயரில் ஏதேதோ பேச வைத்து கடுப்புக்கு மேல் கடுப்பு ஏற்றுகிறார்.


வில்லனாக வரும் ஆதியின் கதாபாத்திரத்திலும் அழுத்தம் இல்லை. பல இடங்களில் அந்த கதாபாத்திரம் சிரிப்பையும் சலிப்பையுமே கொடுக்கிறது. ஒட்டுமொத்தத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட அழகான வாய்ப்பை லிங்கு மீண்டும் தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதே உண்மை.. நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள் லிங்கு... உங்கள் அன்புக்காக உங்கள் நண்பர்கள் வேண்டுமானால் துணை நிற்பார்கள்.. ஆனால் சினிமா துணை நிற்காது.. அப்டேட் ஆகணும் லிங்கு.. 


ALSO READ | Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!