The Legend Movie Review Tamil: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள் நடிப்பில் இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கதையின் கரு:
பிரபல விஞ்ஞானியாக வலம் வரும் சரவணனின் உயிர் நண்பனின் குடும்பம், சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு இன்சுலின் செலுத்திக்கொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று நண்பன் உயிரிழந்து விட, அது சரவணனை பெரிதும் பாதிக்கிறது. இந்த பாதிப்பு அவரை சர்க்கரை வியாதியை குணப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட செய்கிறது. இந்த ஆராய்ச்சியில் அவர் சந்தித்த பிரச்னைகள், இறுதியில் அவர் அந்த மருந்தை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா..? என்பதை விளக்குவதே தி லெஜண்ட்.
லெஜண்ட் சரவணன் நடிகராக அறிமுகமாகும் படம். சினிமா மீதுள்ள மோகத்தின் காரணமாக, முதல் படத்தையே கோடிகளை கொட்டி எடுத்திருக்கிறார். ஆனால் ஒரு விஷயம், நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல நிச்சயம் எல்லா இடங்களிலும் மோசமான அவர் நடிப்பை வெளிப்படுத்தவில்லை. முடிந்த அளவு முயற்சித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மிடுக்கு முகத்துடன் அதகளம் செய்யும் சரவணன், காதல் காட்சிகளில் ரசிக்க வைப்பதற்கு பதிலாக சிரிக்க வைக்கிறார்.
சிரிப்பலையில் ஆழ்த்திய அண்ணாச்சி
எமோஷனல் காட்சிகளில் முற்றிலும் ஜீரோவாகி நிற்கிறார் என்பது, அது சம்பந்தமான காட்சிகளில் தியேட்டரில் எழும் சிரிப்பலையில் இருந்து தெரிந்தது. பாடல் காட்சிகளில் முடிந்த அளவு ஆட அவர் முயற்சித்து இருந்தாலும், அங்கும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
கற்கவேண்டிய பாடம்
சரவணன் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கலைஞர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் கலையை விலைகொடுத்து வாங்க முடியாது. அந்தக் கலை கைவர, திட்டமிட்டலோடு கூடிய முயற்சியும், விடாமுயற்சியோடு இணைந்த பயிற்சியும் தேவை. வெறும் சினிமா மோகத்திற்காகவும், பிரபலத்திற்காகவும் ஏனோதானோ என்று சினிமாவை நீங்கள் அணுகினால், தானே பட்டம் கொடுத்துக்கொள்ளும் காமெடி ஸ்டார்களின் லைனில் நிற்பதுதான் ஒரே வழி. நினைவில் வைத்து நடியுங்கள்.
இவருக்கு ஜோடியாக வரும் கீதிகா திவாரி நடிப்பில் பெரிதாக தேறவில்லை என்றாலும், கிளாமரிலும், ஆடும் நடன அசைவுகளிலும் கட்டிப்போட்டு விடுகிறார். இவர்களுடன் பிரபு, ரோபா ஷங்கர், தேவதர்ஷினி, விஜயகுமார் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு வழக்கம் போல நியாயம் செய்திருக்கிறார்கள். யோகி பாபு பெருத்த ஏமாற்றம்
சொதப்பிய திரைக்கதை
படத்தின் ப்ளாட் உண்மையில் என்கேஜிங்கான ப்ளாட்தான். சர்க்கரை வியாதி என்று சொல்லும் போதே, படம் மக்களுடன் கனக்ட் ஆகிறது. ஆனால் வைத்து மட்டுமே படத்தை ஓட்ட முடியாது. அதை சரிவர பார்வையாளனுக்கு கடத்த நேர்த்தியான திரைக்கதை அவசியம். அதில் அதரபழைய டெம்ப்ளேட் திரைக்கதையை சொருகி இருப்பதன் மூலம், முழுவதுமாக கோட்டை விட்டு இருக்கிறார்கள் இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி.
அவர்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்பதை உங்களுக்கு முன்னரே ஆடியன்ஸ் சொல்லி விடுகிறார்கள். அங்கேயே படம் கைநழுவி சென்று விட்டது சரி கதையை கவனிப்போம் என்று கொஞ்சம் கஷ்டப்பட்டு உட்காரும் வேளையில், படக் படக் என்று பாடலையும், ஃபைட்டையும் வைத்து சோதிக்கிறார்கள். உங்களுக்கு பாவமா இல்லையா சார்? வி எஃப் எக்ஸில் அண்ணாச்சியின் முகம் தனியாக கழன்று ஆடுவதையெல்லாம் மன்னிக்கவே முடியாது.
லோகேஷன்கள் அனைத்தும் சூப்பர்.
லோகேஷன்கள் அனைத்தும் சூப்பர். பாடல்களில் ஹாரிஸூக்கான முத்திரை இல்லாவிட்டாலும், படத்தோட இணைந்து பார்க்கும் போது பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசையில் பல இடங்களில், ஒரு இடத்தில் பயன்படுத்திய இசையை அப்படியே காப்பி பேஸ்ட் அடித்திருக்கிறார். இவ்வளவு சிக்கல்களிலும் படத்தை தாங்கி நிற்பது அனல் அரசின் சண்டை இயக்கமும், வேல் ராஜின் ஒளிப்பதிவும்தான். திரைக்கதையில் சுவாரஸ்யம் அல்லாமை, தேவையில்லாத பஞ்ச் வசனங்கள், பாடல்களை வலிந்து திணிந்திருப்பது உள்ளிட்டவற்றை தவிர்த்திருந்தால் அண்ணாச்சி திட்டு வாங்காமலாவது தப்பித்திருக்கலாம். குட் லக் நெக்ஸ்ட் டைம்.. விட்றா வண்டிய..