திரையில் ஒரு நாவலை காட்சியாக ஓடவிடுவதும் மலையாளத்துக்கே உண்டான சிறப்பு. கமர்ஷியல், மசாலா,ஹீரோக்கள் பில்டப் என்ற போக்கு குறைந்து சற்று கதையை வைத்தே பயணிப்பது தான் அதன் சாராம்சம். அப்படியான ஒரு எளிய, சூப்பர் மலையாள சினிமா ஒன்று அமேசானில் வெளியாகியுள்ளது. சாராஸ்.
திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் ஓடும் நாயகி தனக்கு பிடித்த ஒருவரையும் கண்டு திருமணம் செய்துகொள்கிறார். திருமணம் முடிந்தாலே சமூகத்தின் அடுத்தப்பார்வை குழந்தை என்ற புள்ளிக்கு செல்வதை நோக்கியே படம் நகர்கிறது. ஒரு இயக்குநர் முதல் படத்தை படைக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? அதுவும் நாயகி பெண் இயக்குநர் என்பதால் பல தடைகளை தாண்டி பட வேலைகளுக்கு பச்சை சிக்னல் கிடைக்கிறது. எல்லாம் சரியாக தொடங்கிய புள்ளியில் நாயகி கருவுறுகிறாள். தன் கனவா? தாய்மையா? குழந்தை பெற்றெடுப்பது பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு சுற்றுப்புற மக்களிடம் இருந்து வரும் அழுத்தம் என்ன? ஒரு பெண்ணுக்கு தாய் வீடு, புகுந்த வீடு, கணவர் என அவள் நம்பும் உறவுகள் கொடுக்கவேண்டிய ஆதரவு எத்தகையது? என பல விஷயங்களை படம் அழகாக கடந்து செல்கிறது. நாயகி எடுத்த முடிவு என்ன? அதற்கு உறவுகள் கொடுத்த ஆதரவு என்ன? என்ற முடிவோடு படமும் முடிவடைகிறது.
படத்தின் நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். கும்பலாங்கி நைட்ஸ், கப்பேலா, ஹெலன் படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்த அன்னா, இப்படத்திலும் அதனை தொடர்ந்துள்ளார். தாய்மை - சிறுவயது கனவு என இரண்டுக்கும் நடுவே குழப்பத்திலும், வருத்தத்திலும் நிற்கும் பெண்ணாகவே வாழ்ந்துள்ளார். கனவனாக வரும் சன்னி வானேவும் நடிப்பில் கவர்கிறார்.
'Better not be a parent... than be a bad parent என்று அழுத்தமாக சொல்லும் கவுன்சிலிங் டாக்டர், உதவிக்கு கணவர் கூட வராமல் கையில் ஒரு குழந்தையுடனும், வயிற்றில் ஒரு குழந்தையுடனும் மருத்துவமனை வரும் ஒரு பெண், பெரிய நடிகையாக இருந்தாலும் உறவுகளுக்காகவும், பொறுப்புகளுக்காகவும் வீட்டுக்குள் முடங்கிய பெரிய நடிகை ஒருவரின் கதாபாத்திரம் என படத்தில் வரும் சின்ன சின்னக் கதாபாத்திரங்கள் படத்தின் மையக்கருத்தை அழுத்தமாக சொல்லி செல்கின்றனர். படம் விறுவிறுப்பாக தொடங்குவதாக இருந்தாலும் போகப்போக மெல்ல நடை போடுகிறது. ஆனாலும் 'என்னப்பா இது?' என நம்மை நெளிய வைக்கவில்லை.
ஷான் ரகுமான் இசை படத்தை அழகாக நகர்த்திச் செல்கிறது. தாய்மை என்பது பெண் உடல் சார்ந்த விவகாரம். அது தொடர்பான முடிவுகளை அவளைத் தவிர வேறு யாருக்கும் எடுக்க உரிமை இல்லை என்பதை தெளிவாக சொல்கிறது சாராஸ். அதே நேரத்தில் குழந்தைப்பேறு என்பது எதற்கும் தடையில்லை. தாய்மையுடன் சாதித்த பல பெண்களை சாராஸ் கவனிக்கவும் தவறியிருக்கிறது. ஆக மொத்தம், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கக்கூடிய நல்ல சினிமாவை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது.