கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாளத்தில் வெளியாகிய படம் பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜு மற்றும் நஸ்லென் கே கஃபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஷியாம் மோகன், மீனாக்‌ஷி ரவீந்திரன், மேத்யு தாமஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். ஃபகத் ஃபாசில் இப்படத்தை தயாரித்துள்ளார். பிரேமலு படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.




பிரேமலு


இயக்குநர் கிரீஷ் இயக்கத்தில் முன்னதாக வெளியான சூப்பர் ஷரண்யா படத்திற்கும் பிரேமலு படத்திற்கும் சில தொடர்புகளைப் பார்க்கலாம். இரண்டு படங்களின் முக்கிய கதாபாத்திரங்களின் இயல்பும் ஒன்று போல தான். கூச்ச சுபாவம் கொண்ட பெரியளவில் சாமர்த்தியங்களை வெளிப்படுத்தாதவர்களே  இப்படத்தின் கதாபாத்திரங்கள். இவர்கள் தெரியாமல் தங்களுடைய இயல்பில் இருந்து செய்யும் பல செயல்கள் நமக்கு நகைச்சுவையானதாக இருக்கும்.


அடிக்கடி தவறு செய்பவர்களாகவும் தங்களுடைய நண்பர்களால் கேலி செய்யப்படுபவர்களாக நமது நட்பு வட்டத்தில் ஓரமாக இருப்பவர்களையே தனது படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக மாற்றுகிறார் இயக்குநர் கிரீஷ்.இரண்டு படத்திற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் என்றால் சூப்பர் ஷரண்யா படம்  கதாநாயகியை மையப்படுத்தியது என்றால் பிரேமலு படத்தில் ஒரு ஆணை மையப்படுத்தி இருக்கிறது.


கதை




குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் சேலத்தில் ஒரு சுமாரான கல்லூரியில் தனது படிப்பை முடித்துச் செல்கிறான் சச்சின். நான்கு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணிடம் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து காதலை சொல்லி அவளால் நிராகரிக்கப்படுகிறான். எப்போதும் முட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோர்கள், சலிப்படைந்த தனது ஊரை விட்டு எப்படியாவது லண்டனுக்குச் சென்று தனது இந்த மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கிறான். ஆனால் விதி அவனை விஸா கிடைக்காமல் தனது நண்பனுடன் கேட் பரீட்சைக்கு ஹைதராபாதில் கோர்ஸ் சேர வைக்கிறது.


மறுபக்கம் ஹைதராபாதில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார் ரீனு. புதிதான வேலை, நண்பர்கள், கை நிறைய சம்பளம் என வாழ்க்கையை புதிதாக தொடங்கும் ரீனுவுக்கு ஒரே ஆசைதான். நல்ல பொறுப்பான, செட்டில் ஆன ஒரு ஆணை திருமனம் செய்துகொண்டு 30 வயதிற்குள் குழைந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.


லட்சியத்தோடு இருக்கும் ரீனுவும் இலக்கற்று சுற்றும் சச்சினும் சந்தித்துக் கொள்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் ரீனு மீது காதல் வயப்படுகிறான் சச்சின். இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை இந்த முறையும் ஒன் சைட் லவ்வராகவே இருந்தானா சச்சின்? என்பதே பிரேமலு படத்தின் கதை.


புதுசா என்ன இருக்கு 


கதை என்னமோ தமிழ். இந்தி, மலையாளம் , கன்னடம் என உலகத்தின் எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்ட அதே பழையக் கதைதான். ஒன் சைட் லவ்வர்ஸூக்கு இருக்கும் ஏக்கம், எல்லாவற்றையும் கூடவே இருந்து சகித்துக் கொள்ளும் நண்பன், மிடில் கிளாஸ் வாழ்க்கை, காதலிக்கும் பெண்ணின் அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பாய் பெஸ்டி, என இதுவரை நாம் பார்த்த எல்லா எமோஷன்களும் இப்படத்தில் இருக்கின்றன.


ஆனால் எதையுமே ஹைலைட் செய்யாமல் எல்லாவற்றையும் இயல்பாக நடக்கவிட்டு திரையரங்கத்தை கலகலவென சிரிப்பொலிகளால் நிறப்புகிறார்கள். நகைச்சுவையிலும் எழுதி மனப்பாடம் செய்த நகைச்சுவைத் துணுக்குகளாக இல்லாமல் எதார்த்த வாழ்க்கையில் வெளிப்படும் அபத்தமான உணர்ச்சிகளை, தருணங்களையே நகைச்சுவையாக மாற்றியிருக்கிறார்கள். இடையிடையில் செல்வராகவன் , யுவன் ஷங்கர் ராஜா மீது இயக்குநருக்கு இருக்கும் ஆதர்சமும் வெளிப்படுவது தமிழ் ரசிகர்களை படத்துடன் இன்னும் ஒன்ற வைக்கிறது.


நடிகர்கள் ஒவ்வொருவரும் கதையின் இந்த இயல்போடு ஒன்றி தங்களது கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார்கள். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பப் பார்ப்பது சில இடங்களில் சலிப்பாக இருக்கும் காட்சிகளில் கூட சிரிப்பிற்கு குறைவிருக்கவில்லை. பின்னணி இசையும் பாடல்களும் பார்வையாளர்களை கவர்கின்றன. இந்த காதலர் தினத்தில் சிங்கிளாக இருக்கிறோமே என்று வருத்தப்படுபவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் பிரேமலு.